இந்தியா - நியூஸிலாந்து 2வது ஒருநாள் போட்டி: ராஜ்கோட்டில் ராகுல் சதம் வீண்; நியூஸிலாந்து அபார வெற்றி!
இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அபார வெற்றி பெற்றது.
இந்தியாவின் கோட்டையாகக் கருதப்படும் ராஜ்கோட் மைதானத்தில், இந்தியப் பந்துவீச்சாளர்களின் வியூகங்களைச் சிதறடித்த நியூஸிலாந்து அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
ராஜ்கோட் நிரஞ்சன் ஷா மைதானத்தில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 284 ரன்கள் குவித்தது. கே.எல். ராகுலின் அதிரடி சதம் இந்தியாவிற்கு வலுவான நிலையைத் தந்தது. இருப்பினும், 285 ரன்கள் என்ற சவாலான இலக்கை எதிர்கொண்ட நியூஸிலாந்து அணி, டேரில் மிட்செலின் அசாத்திய சதத்தின் உதவியுடன் 47.3 ஓவர்களிலேயே வெற்றியை ருசித்தது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் நியூஸிலாந்து சமன் செய்துள்ளது.
டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த நியூஸிலாந்து கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல்லின் முடிவிற்குச் சாதகமாக, இந்திய அணியின் மிடில் ஆர்டரை கிவிஸ் பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்தில் கட்டிப்போட்டனர். ரோஹித் சர்மா (24) மற்றும் ஷுப்மன் கில் (56) நல்ல தொடக்கத்தைத் தந்தாலும், விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்த இக்கட்டான சூழலில் களம் புகுந்த கே.எல். ராகுல், நங்கூரம் பாய்ச்சி நின்று வெறும் 92 பந்துகளில் 112 ரன்கள் (அவுட் இல்லை) குவித்து அசத்தினார். அவருக்கு உறுதுணையாகப் பார்ட்னர்ஷிப் அமைத்த ரவீந்திர ஜடேஜா மற்றும் இளம் வீரர் நிதிஷ் குமார் ரெட்டி முறையே 73 மற்றும் 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஸ்கோரை உயர்த்தினர். 50 ஓவர் முடிவில் இந்தியா 284/7 ரன்கள் எடுத்தது.
இதையும் படிங்க: பயிற்சியின்போது காயம்..!! நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்..!!
இருப்பினும், பந்துவீச்சில் இந்திய அணி இன்று முற்றிலும் சோபிக்கத் தவறியது. நியூஸிலாந்து வீரர் டேரில் மிட்செல் 131 ரன்கள் (நாட் அவுட்) குவித்து இந்தியப் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவருக்குப் பக்கபலமாக நின்ற வில் யங் 87 ரன்கள் எடுத்து வெற்றியை எளிதாக்கினார். இந்த ஜோடி 3-ஆவது விக்கெட்டிற்கு வெறும் 152 பந்துகளில் 162 ரன்கள் சேர்த்து இந்தியாவின் வெற்றி வாய்ப்பைத் தட்டிப் பறித்தது. இந்தியாவிற்கு எதிராகத் தான் விளையாடிய கடைசி நான்கு இன்னிங்ஸ்களில் மூன்று முறை சதம் அடித்து மிட்செல் ‘இந்தியாவின் சிம்ம சொப்பனம்’ என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.
இந்தியாவில் நியூஸிலாந்து அணி ஒருநாள் போட்டியில் சேஸ் செய்த அதிகபட்ச ரன் இதுவாகும். ஒருநாள் தொடரைத் தீர்மானிக்கும் 3-ஆவது மற்றும் கடைசிப் போட்டி வரும் ஜனவரி 18-ஆம் தேதி இந்தூரில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: WPL தொடரை பார்க்க ரசிகர்களுக்கு 'NO' பர்மிஷன்..!! காரணம் இதுதான்..!!