×
 

காமன்வெல்த் போட்டியில் இந்தியா மிரட்டல்! குத்துச் சண்டையில் 7 தங்கம்! வரலாற்று சாதனை! தொடரும் பதக்க வேட்டை!

2026 கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் இந்திய குத்துச் சண்டை அணி 7 தங்கம், 3 வெள்ளிப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. அங்குஷ் பங்கல் தங்கம் வென்ற நிலையில், இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களை குவித்து அசத்தி வருகின்றனர். குறிப்பாக குத்துச் சண்டைப் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி 7 தங்கம் மற்றும் 3 வெள்ளிப் பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்திய விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் இந்த சாதனை பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குத்துச் சண்டை போட்டியில் 10 பிரிவுகளில் இந்திய வீரர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தனர். ஏற்கனவே சாக்‌ஷி, பிரீத்தி, ஜேஸ்மின், பிரியா, அருந்ததி சவுத்ரி மற்றும் சச்சின் சிவாச் ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருந்தனர். அதேபோல் ஜடுமணி சிங் மற்றும் லவ்லினா வெள்ளிப் பதக்கங்களை கைப்பற்றியிருந்தனர்.

இந்த நிலையில் ஆண்கள் 80 கிலோ எடைப்பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் அங்குஷ் பங்கல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இங்கிலாந்து வீரரை 4-1 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்திய அவர் தங்கப் பதக்கத்தை வென்று இந்தியாவின் தங்க எண்ணிக்கையை மேலும் உயர்த்தினார். போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்திய அங்குஷின் ஆட்டம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.

இதையும் படிங்க: காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் தங்க வேட்டை! ஒரே நாளில் 2 தங்கம்... ஜூடோவில் அசத்திய அஷ்மிதா, ஹர்ஷ் சிங்!

மற்றொரு இறுதிப் போட்டியில் ஆண்கள் 90 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் நரேந்தர் பெர்வால், இங்கிலாந்தின் டமர் தாமஸை எதிர்கொண்டார். கடுமையான போட்டிக்குப் பிறகு 0-5 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்த அவர் வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி அடைந்தார். இதன் மூலம் இந்திய குத்துச் சண்டை அணி மொத்தமாக 7 தங்கம் மற்றும் 3 வெள்ளிப் பதக்கங்களை வென்று இந்த தொடரில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

இதனுடன் தடகளப் போட்டியிலும் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்தது. ஆண்கள் 5,000 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் குல்வீர் சிங் 13 நிமிடங்கள் 24.95 வினாடிகளில் இலக்கை எட்டி மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். அவரது சிறப்பான ஓட்டமும் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை உயர்த்த உதவியது.

இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில் இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி மற்றும் 9 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 39 பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தில் நீடித்து வருகிறது. மீதமுள்ள போட்டிகளிலும் இந்திய வீரர்கள் மேலும் பல பதக்கங்களை வெல்வார்கள் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: காமன்வெல்த் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம்! நீரஜ் சோப்ராவை மிஞ்சினார் இலங்கை வீரர்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share