×
 

டி20 உலகக்கோப்பை 2026... இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா!

இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை 2026 தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், நடப்புச் சாம்பியனான இந்தியா, இங்கிலாந்து அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.


முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் வெறும் 42 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வலுவான அடித்தளம் அமைத்தார். இஷான் கிஷன் (39), ஷிவம் துபே (43) மற்றும் ஹர்திக் பாண்டியா (27) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா 250 ரன்களைக் கடந்தது.

254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி, கடைசி வரைப் போராடியது. அந்த அணியின் இளம் வீரர் ஜேக்கப் பெத்தேல் (Jacob Bethell) 48 பந்துகளில் 105 ரன்கள் குவித்து இந்தியாவிற்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். இருப்பினும், கடைசி ஓவர்களில் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியாவின் துல்லியமான பந்துவீச்சால் இங்கிலாந்து அணியால் 20 ஓவர்களில் 246 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதையும் படிங்க: இந்தியா vs பாகிஸ்தான்: டி20 உலகக் கோப்பை போட்டி நடக்குமா? அடுத்த 24 மணி நேரத்தில் இறுதி முடிவு!

வரும் மார்ச் 8, ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மகுடத்திற்காக மோதவுள்ளன.

மும்பை வான்கடே மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் 'இந்தியா... இந்தியா...' என முழக்கமிட்டு வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடினர். இந்த வெற்றி, இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இதையும் படிங்க: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி டி-20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share