குஜராத்தை வீழ்த்தி மாஸ் காட்டிய பெங்களூரு! தொடர்ந்து 2வது முறையாக ஐபிஎல் கோப்பை வென்று ஆர்சிபி வரலாற்று சாதனை!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி, தொடர்ந்து 2-ஆவது முறையாக ஐபிஎல் சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த 2026 ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் பிரம்மாண்ட இறுதிப்போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி இமாலய வெற்றி பெற்று, மீண்டும் சாம்பியன் கோப்பையைத் தட்டித் தூக்கியுள்ளது.
மில்லியன் கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அகமதாபாத் மைதானத்தில் அரங்கேறிய இந்த விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மகுடத்திற்காக நேருக்கு நேர் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி, ஆர்சிபியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே குவித்தது.
அதனடாந்தொடர்ந்து, 156 ரன்கள் எடுத்தால் மீண்டும் சாம்பியன் ஆகலாம் என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரு அணிக்கு, ரன் மெஷின் விராட் கோலி தனது அசாத்திய பேட்டிங் திறமையால் இமாலய பலம் சேர்த்தார். ஆட்டத்தின் ஆரம்பம் முதலே குஜராத் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த விராட் கோலி, அதிரடியாக அரைசதம் விளாசி 75 ரன்கள் குவித்து அணியின் வெற்றிப் பாதையை எளிதாக்கினார். கோலியின் இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம், பெங்களூரு அணி 18 ஓவர்களிலேயே இலக்கை மிக லாவகமாக எட்டிப்பிடித்து, குஜராத்தை வீழ்த்தி மாபெரும் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: குவாலிஃபையர் 2 அதிரடி: ராஜஸ்தானை வீழ்த்தி ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது குஜராத் டைட்டன்ஸ்!
இந்த அசாத்திய வெற்றியின் மூலம், கடந்த ஆண்டு தங்களின் முதல் ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றிய பெங்களூரு அணி, இந்த ஆண்டும் கோப்பையை வென்று தொடர்ந்து 2வது முறையாகச் சாம்பியன் பட்டம் வென்று அசுர சாதனை படைத்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்குப் பிறகு, தொடர்ந்து இரண்டு முறை சாம்பியன் கோப்பையை வென்ற மூன்றாவது அணி என்ற பெருமையைப் பெங்களூரு அணி தட்டிச் சென்றுள்ளது. ஆர்சிபி மீண்டும் சாம்பியன் மகுடம் சூடியதை அடுத்து, பெங்களூரு நகர வீதிகள் முழுவதும் திரண்ட ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தங்களின் எல்லையற்ற மகிழ்ச்சியைக் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ராஜஸ்தான் ராயல்ஸ் அதிரடி வெற்றி! சர்வதேச கிரிக்கெட்டை மிரள வைத்த 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி!