#BREAKING: ஐபிஎல் 2026: சதம் அடித்து அசத்திய சஞ்சு சாம்சன்..!! டெல்லியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் வெற்றி..!!
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2026 தொடரின் 18-வது லீக் ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) இந்த சீசனின் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், சென்னை அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டுமே அபாரமாக இருந்தது.
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 212 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 189 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆனால், சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் தொடக்கம் முதலே அதிரடி காட்டினர். சிஎஸ்கே விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் அபாரமாக ஆடி 56 பந்துகளில் 115 ரன்கள்* (15 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) விளாசினார். ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணிக்காக சதம் அடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையை அவர் பெற்றார். இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே 36 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து சாம்சனுக்குச் சிறந்த ஒத்துழைப்பு தந்தார். இறுதியில் ஷிவம் துபே 10 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஸ்கோரை 200-ஐ கடக்க உதவினார்.
இதையும் படிங்க: ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை! ஹைதராபாத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ்!
213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணிக்குத் தொடக்கம் முதலே நெருக்கடி தரப்பட்டது. டெல்லி அணியின் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 38 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து கடைசி வரை போராடினார். பாதும் நிசங்கா 41 ரன்களும், அசுதோஷ் சர்மா 19 ரன்களும் எடுத்தனர்.
சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேமி ஓவர்டன் 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லியின் வெற்றிக் கனவைத் தகர்த்தார். அன்ஷுல் காம்போஜ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையும் படிங்க: சிஎஸ்கே-வை வீழ்த்தியது பஞ்சாப்! சேப்பாக்கத்தில் சென்னைக்கு தொடர் தோல்வி!