"LIFETIME ACHIEVEMENT AWARD"..!! இந்திய முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்-க்கு கிடைத்த கௌரவம்..!!
பிசிசிஐயின் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு இந்திய முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான் ராகுல் டிராவிட் தேர்வாகியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மற்றும் உள்நாட்டு அளவில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பிற தொடர்புடையவர்களை கௌரவிக்கும் வகையில் 'நமன்' விருது விழாவை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு (2025-26 சீசன்) இந்த விருது விழா வரும் மார்ச் 15-ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ளது.
இந்த விழாவில் மிக முக்கியமான விருதுகளில் ஒன்றான கொல்னல் சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது (Col CK Nayudu Lifetime Achievement Award) இந்திய கிரிக்கெட்டின் 'தி வால்' என்று அழைக்கப்படும் முன்னாள் கேப்டனும், முன்னாள் தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிடுக்கு வழங்கப்படவுள்ளது. ராகுல் டிராவிட் தனது வீரர்காலத்தில் உறுதியான ஆட்டத்தால் உலக அளவில் புகழ்பெற்றவர். அவர் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தியபோது இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் டெஸ்ட் தொடர்களில் வெற்றி பெற வைத்தவர்.
பின்னர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றபோது, இந்திய அணியை தொடர்ந்து வலுப்படுத்தினார். குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை சாம்பியனாக்கி வரலாற்று சாதனை படைத்தார். அவரது பங்களிப்பு இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்த வாழ்நாள் சாதனை விருது அவரது நீண்டகால சேவைக்கு சரியான அங்கீகாரமாக அமைகிறது.
இதையும் படிங்க: இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜாக்பாட்..!! ரூ.131 கோடி பரிசு... பிசிசிஐ மாஸ் அறிவிப்பு..!!
மேலும், இந்த ஆண்டின் சிறந்த ஆண் கிரிக்கெட் வீரர் விருது (Polly Umrigar Award for Cricketer of the Year) இந்திய அணியின் தற்போதைய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணி கேப்டனான சுப்மன் கில்லுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இளம் வயதிலேயே திறமையை நிரூபித்த கில், கடந்த சீசனில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக இங்கிலாந்தில் நடைபெற்ற தொடரில் 2-2 என்ற கணக்கில் சமநிலை பெற உதவியதோடு, பேட்டிங்கிலும் முக்கிய பங்காற்றினார்.
கேப்டனாகவும் தனது தலைமைத்துவத்தை நிரூபித்து வரும் அவர், இந்த விருதுக்கு தகுதியானவர் என பிசிசிஐ மதிப்பீடு செய்துள்ளது. இதுதவிர, உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறந்த ஆல்-ரவுண்டர் விருது (Lala Amarnath Award) மும்பை அணியைச் சேர்ந்த ஆயுஷ் மாத்ரேவுக்கு வழங்கப்பட உள்ளது. முன்னாள் இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் உள்ளிட்டோருக்கும் வாழ்நாள் கௌரவ விருதுகள் பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிசிசிஐயின் இந்த ஆண்டு விருதுகள் இந்திய கிரிக்கெட்டின் கடந்தகால சாதனைகளையும், தற்போதைய இளம் தலைமுறையின் எழுச்சியையும் ஒரே நேரத்தில் கொண்டாடும் வகையில் அமைந்துள்ளன. ராகுல் டிராவிட் போன்ற ஜாம்பவான்களின் பங்களிப்பு அடுத்த தலைமுறை வீரர்களுக்கு உத்வேகமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இதையும் படிங்க: இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜாக்பாட்..!! ரூ.131 கோடி பரிசு... பிசிசிஐ மாஸ் அறிவிப்பு..!!