யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடி! மும்பையை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் 'ஹாட்ரிக்' வெற்றி!
மழையால் 11 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட ஆட்டம்; 27 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அபார வெற்றி!
ஐபிஎல் 2026 தொடரின் 13-வது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்புத் தொடரில் தனது மூன்றாவது தொடர் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. கௌகாத்தியில் உள்ள பார்சபாரா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டி மழையின் குறுக்கீடு காரணமாக 11 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.
டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆனால், ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆரம்பத்திலிருந்தே அதிரடியைத் தொடங்கினார்.அவர் 32 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 77 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 14 பந்துகளில் 39 ரன்கள் விளாச, 11 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் குவித்தது.
151 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. முன்னணி வீரர்கள் ரோகித் சர்மா (Sandeep Sharma பந்துவீச்சில் LBW), சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் நந்த்ரே பர்கர், ரவி பிஷ்னோய் மற்றும் சந்தீப் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பையை நிலைகுலையச் செய்தனர். 11 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்துத் தோல்வியைத் தழுவியது.
இதையும் படிங்க: கடைசி பந்து வரை திக் திக்.. குஜராத்தை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் திரில் வெற்றி!
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று, ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தியதோடு புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. மும்பை அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 1 வெற்றி மற்றும் 2 தோல்விகளுடன் ஏழாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தோனி இல்லாத குறையை தீர்க்குமா யெல்லோ ஆர்மி! நாளை பஞ்சாப் கிங்ஸுடன் பலப்பரீட்சை!