2026 T20 உலகக்கோப்பை... இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ...!
டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு ஐசிசி ஆண்களுக்கான டி20 உலகக் கோப்பைத் தொடர், கிரிக்கெட் உலகின் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு மாபெரும் நிகழ்வாகும். இது தொடரின் பத்தாவது பதிப்பாகும், இந்தியாவும் இலங்கையும் இணைந்து இதை நடத்துகின்றன. 2024 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற தொடரில் இந்தியா கோப்பையை வென்று நடப்புச் சாம்பியனாக களமிறங்குகிறது. இந்த முறை தொடர் பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது, மொத்தம் 55 போட்டிகளுடன் 20 அணிகள் பங்கேற்கின்றன.தொடர் இந்தியாவின் ஐந்து மைதானங்களிலும் இலங்கையின் மூன்று மைதானங்களிலும் நடைபெறுகிறது.
இந்தியாவில் அகமதாபாத் (நரேந்திர மோடி ஸ்டேடியம்), மும்பை (வாங்கடே ஸ்டேடியம்), கொல்கத்தா (ஈடன் கார்டன்ஸ்), சென்னை (எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம்), டெல்லி (அருண் ஜெட்லி ஸ்டேடியம்) ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன. இலங்கையில் கொழும்புவின் ஆர். பிரேமதாசா ஸ்டேடியம், சிங்கள விளையாட்டுக் கழக மைதானம் மற்றும் கண்டியின் பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஆகியவை போட்டிகளை நடத்துகின்றன. இறுதிப் போட்டி அகமதாபாத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் சூர்யா குமார் யாதவ் தலைமையிலான பதினைந்து பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அபிஷேக் ஷர்மா, சஞ்சு சம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் அடங்கிய குழு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்ஷேர் பட்டேல், ரிங்கு சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க: IPL 2026: மார்ச் 26ம் தேதி தொடங்குகிறது 19வது ஐபிஎல் தொடர்..!! பிசிசிஐ அறிவிப்பு..!!
உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட இஷான் கிஷன் இந்திய t20 உலக கோப்பை அணியில் இடம் பிடித்துள்ளார். டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் சுப்மன் கில்லுக்கு இடம் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்திய டி20 உலக கோப்பை அணியில் இடம் பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க: மகளிர் பிரீமியர் லீக் 2026: எப்போ நடக்குது தெரியுமா..?? பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!