×
 

உலகக்கோப்பை வெற்றிக்குப் பின் தீப்தி சர்மாவுக்கு டிஎஸ்பி பதவி..!! யோகி ஆதித்யநாத் பாராட்டு..!!

உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீராங்கனை தீப்தி சர்மாவை பாராட்டி டிஎஸ்பியாக நியமித்துள்ளார் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 2025 ஐசிசி உலகக்கோப்பையை வென்றதும், அணியின் நட்சத்திர வீராங்கனை தீப்தி சர்மாவை உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சிறப்பாகக் கௌரவித்துள்ளார். தீப்தி சர்மாவின் அசாதாரண சாதனையைப் பாராட்டி, அவரை டிஎஸ்பி பதவிக்கு நியமித்துள்ளார். 2025 ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடரில் இந்தியாவை முதல் முறையாக சாம்பியன் பட்டத்திற்கு வழிநடத்திய தீப்தியின் விளையாட்டுத் திறனை அரசு சிறப்பித்து இந்த முடிவை எடுத்துள்ளது.

கடந்த நவம்பர் 2-ஆம் தேதி மும்பை டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா முதல்முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது. இதில் தீப்தி சர்மாவின் பங்களிப்பு அபரிமிதம். டூர்னமென்ட்டில் அதிக விக்கெட்டுகள் (22) வீழ்த்தியவராகவும், 200-க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்தவராகவும் சாதனை படைத்தார்.

இதையும் படிங்க: ICC மகளிர் உலகக் கோப்பை 2025: இந்திய அணி வரலாற்று வெற்றி.. முதல் சாம்பியன் பட்டம்..!!

ஆண்கள்-பெண்கள் உலகக்கோப்பையில் ஒரே தொடரில் 200 ரன்கள் + 20 விக்கெட்டுகள் என்ற 'டபுள்' சாதனையை முதல்முறையாக நிகழ்த்தியவர் தீப்தி. இறுதிப் போட்டியில் அரைசதம், 5 விக்கெட்டுகள் என 'பிளேயர் ஆஃப் தி மேட்ச்' மற்றும் 'பிளேயர் ஆஃப் தி டூர்னமென்ட்' விருதுகளை வென்றார். இந்தியாவின் முதல் உலகக் கோப்பை வெற்றியில் ஷாஃபாலி வர்மாவுடன் தீப்தி முக்கியப் பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், லக்னோவில் நடந்த விழாவில் தீப்திக்கு நியமனத்தை வழங்கினார். 'குஷல் கிலாதி யோஜனா' திட்டத்தின் கீழ் விளையாட்டு முறையில் நியமனம் செய்யப்பட்ட தீப்தி, 3 கோடி ரூபாய் காசோலைப் பரிசாகவும் பெற்றார். "தீப்தி போன்ற இளம் விளையாட்டு வீராங்கனைகள் உ.பி.யின் பெருமையை உலக அளவில் உயர்த்துகின்றனர். அவரது சாதனை இளைஞர்களுக்கு உத்வேகமாக இருக்கும்," என யோகி தெரிவித்தார்.

ஆக்ராவில் ஏழை குடும்பத்தில் பிறந்த தீப்தி, 16 வயதில் தேசிய அளவில் அறிமுகமானார். இந்திய 'ஏ' அணியில் இருந்து முதல் அணிக்கு வந்து, 100-க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ளார். 2022 ஆசியக் கோப்பை வெற்றியிலும் முக்கியப் பங்கு வகித்தவர், இப்போது போலீஸ் சேவையிலும் சேர்ந்துள்ளார். "என் கனவு போலீஸ் அதிகாரியாக பொறுப்பேற்பது.. இந்த வாய்ப்பு கொடுத்த முதலமைச்சருக்கு நன்றி," என தீப்தி கூறினார். இந்த நியமனம், உ.பி. அரசின் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும். மாநிலத்தில் 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் இத்தகைய திட்டத்தால் பயனடைந்துள்ளனர். தீப்தியின் வெற்றி, மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சியை உறுதிப்படுத்துகிறது.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தீப்தியை வாழ்த்தி வருகின்றனர். பிரதமர் மோடி முதல் யோகி வரை அவரை பாராட்டி வருகின்றனர். உத்தரப் பிரதேசத்தில் விளையாட்டு வீரர்களுக்கு அரசு ஆதரவு தொடரும் என யோகி உறுதியளித்தார். தீப்தியின் வெற்றி, இளம் வீராங்கனைகளுக்கு உத்வேகம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share