சர்ச்சையில் சிக்கிய ரியான் பராக்..!! இப்படி மாட்டிக்கிட்டீங்களே..!! அப்படி என்ன செஞ்சாரு தெரியுமா..??
கேப்டன் ரியான் பராக் சர்வ சாதரணமாக உட்கார்ந்துகொண்டு இ-சிகரெட்டை புகைக்கும் காட்சி வெளியாகியுள்ளது.
முல்லன்பூர் விளையாட்டு மைதானத்தில் ஐபிஎல் 2026 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் இ-சிகரெட் (வேப்) புகைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (ஏப்ரல் 28) பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், இரண்டாவது இன்னிங்ஸில் ராஜஸ்தான் அணி 223 ரன்கள் இலக்கைத் துரத்திக் கொண்டிருந்தபோது, 16வது ஓவரின்போது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
பேட்டிங் செய்து அவுட் ஆன சிறிது நேரத்திலேயே, உடை மாற்றும் அறையில் அமர்ந்திருந்த ரியான் பராக், சக வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் துருவ் ஜூரல் ஆகியோரின் முன்னிலையில் சர்வ சாதாரணமாக இ-சிகரெட்டை புகைத்துக் கொண்டிருந்த காட்சி, நேரலை ஒளிபரப்பில் பதிவாகி சமூக ஊடகங்களில் வைரலானது.
பராக் அந்தப் போட்டியில் 16 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்தார். இந்தியாவில் மின்னணு சிகரெட்டுகள் மீதான தடைச் சட்டம் 2019 (Prohibition of Electronic Cigarettes Act - PECA) அமலில் உள்ள நிலையில், இ-சிகரெட்டுகளை தயாரித்தல், விற்பனை செய்தல், வாங்குதல், இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்தல் உள்ளிட்ட அனைத்து செயல்களும் தடை செய்யப்பட்டுள்ளன. இந்தச் சட்டத்தை மீறினால் கடும் அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க: பஞ்சாப்பின் வெற்றி பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான்! ஜெய்ஸ்வால், பெரைரா அதிரடி அரைசதம்!
இ-சிகரெட்டுகளில் நிகோடின், கஞ்சா உள்ளிட்ட பல்வேறு பொருட்களை எளிதில் செலுத்தி பயன்படுத்தலாம் என்பதால், இளைஞர்கள் மத்தியில் அதிகம் பரவும் அபாயத்தைக் கருத்தில் கொண்டே அரசு இத்தடையை விதித்துள்ளது. மேலும், விளையாட்டு மைதான வளாகம் முழுவதும் புகைப்பழக்கத்துக்கு முழுமையான தடை உள்ளது. உடை மாற்றும் அறை போன்ற இடங்களில் இத்தகைய செயலில் ஈடுபடுவது விளையாட்டு வீரர்களின் ஒழுக்கத்தையும், இளம் ரசிகர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய பொறுப்பையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இது புதிய சர்ச்சை அல்ல. சமீபத்தில் அணியின் மேலாளர் ரோமி பிந்தர் (ரவீந்தர் சிங் பிந்தர்), டக்-அவுட்டில் செல்போன் பயன்படுத்தியதற்காக பிசிசிஐ அபராதம் விதித்து எச்சரிக்கை வழங்கியிருந்தது. இந்நிலையில், ரியான் பராக் சம்பவம் குறித்து பிசிசிஐ உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஐபிஎல் நடத்தை விதிகளின் கீழ் (குறிப்பாக Article 2.2 - விளையாட்டுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் செயல்), அவருக்கு எச்சரிக்கை, அபராதம் அல்லது சஸ்பெண்ட் வரை தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உச்சத்தில் இருக்கும் விளையாட்டு வீரர்கள், குறிப்பாக இளம் ரசிகர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் கேப்டன்கள், சமூகப் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பது பலரின் வலியுறுத்தல். இந்த சம்பவம் விளையாட்டு உலகில் ஒழுக்கம் மற்றும் சட்டப்பூர்வமான நடத்தை குறித்த விவாதத்தை தீவிரப்படுத்தியுள்ளது. பிசிசிஐ இதுபோன்ற சம்பவங்களை தடுக்க கடுமையான வழிகாட்டுதல்களை அமல்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
இதையும் படிங்க: டெல்லியை 'துவம்சம்' செய்த ஆர்சிபி: 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!