WPL 2026 இறுதி போட்டி: டெல்லி - பெங்களூரு இன்று மோதல்!
குஜராத் வதோதரா மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெறும் இறுதி போட்டியில் ஆர்சிபி மற்றும் டெல்லி அணிகள் விளையாட உள்ளனர்.
மகளிர் கிரிக்கெட் உலகின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய WPL 2026 (மகளிர் பிரீமியர் லீக்) தொடரின் இறுதிப்போட்டி இன்று குஜராத் மாநிலம் வதோதராவில் கோலாகலமாகத் தொடங்குகிறது. இரவு 7:30 மணிக்கு நடைபெறவுள்ள இந்த ரத்தமும் சதமுமானப் போரில், நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியும், பலம் வாய்ந்த டெல்லி கேபிடல்ஸ் (DC) அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன.
கடந்த ஒரு மாதமாக ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய WPL தொடர் இன்று அதன் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த முறை கோப்பையை வென்று சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா தலைமையிலான பெங்களூரு அணி, இந்த முறையும் அதே அதிரடியைத் தொடர்கிறது. எல்லிஸ் பெர்ரி மற்றும் சோபி டிவைன் ஆகியோரின் ஆல்-ரவுண்ட் ஆட்டம் அந்த அணிக்கு மிகப்பெரியப் பலமாக உள்ளது. இன்று வெற்றி பெற்றால், இரண்டாவது முறையாகக் கோப்பையை வென்று 'பேக்-டு-பேக்' சாம்பியன் என்றச் சாதனையைப் படைக்கும்.
மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி, கடந்த இரண்டு முறையும் இறுதிப்போட்டி வரை வந்து கோப்பையைத் தவறவிட்டது. இந்த முறை அந்தச் சோகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை ஏந்த வேண்டும் என்ற வெறியுடன் களம் இறங்குகிறது. ஷபாலி வர்மாவின் அதிரடித் தொடக்கம் அந்த அணிக்குத் துருப்புச் சீட்டாக இருக்கும்.
வதோதரா மைதானம் பேட்டிங்கிற்குச் சாதகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. பனியின் தாக்கம் இரண்டாம் பாதியில் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதால், டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்யவே அதிக வாய்ப்புள்ளது.
ஈசாலா கப்பு நம்தே என பெங்களூரு ரசிகர்களும், இந்த முறை எங்களுக்கே என டெல்லி ரசிகர்களும் சமூக வலைதளங்களில் மோதி வருகின்றனர். வதோதரா மைதானம் முழுவதும் ரசிகர்கள் திரண்டுள்ளதால், இன்றையப் போட்டி ஒரு சர்வதேசப் போட்டிக்கு நிகரானப் பரபரப்புடன் இருக்கும் என்பதில் ஐயமில்லை.