அர்ஜென்டினா Vs ஸ்பெயின்: அடேங்கப்பா..!! ஒரு டிக்கெட் விலை இத்தனை லட்சமா..!!
பிபா உலக கோப்பையின் இறுதிப் போட்டி நாளை நள்ளிரவு இந்திய நேரப்படி 12.30 மணிக்கு யூஜெர்சியில் உள்ள MetLife மைதானத்தில் நடக்கிறது.
2026 பிபா உலகக் கோப்பை இறுதிப் போட்டி நாளை (ஜூலை 19) அதிகாலை இந்திய நேரப்படி 12.30 மணிக்கு நடக்கிறது. அமெரிக்காவின் மெட்லைஃப் ஸ்டேடியத்தில் (MetLife Stadium) நடைபெறும் இந்த மோதலில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினாவும், உலகத் தரவரிசையில் 2ஆம் இடத்தில் உள்ள ஸ்பெயினும் மோதுகின்றன. இந்தப் போட்டியை நேரில் காண அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட பிரபலங்கள் வருகை தர இருப்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த இறுதி ஆட்டத்துக்கான டிக்கெட் விலை அமெரிக்காவில் இதுவரை நடைபெற்ற எந்த விளையாட்டுப் போட்டியையும் முறியடித்துள்ளது. சராசரியாக ஒரு டிக்கெட்டின் மறுவிற்பனை விலை 11,327 டாலராக உள்ளது. மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் டிக்கெட் 6,943 டாலரிலிருந்து தொடங்குகிறது. செக்சன் 115ஏ போன்ற பிரீமியம் இடங்களில் 28,479 டாலர் வரை செல்கிறது. இது கடந்த 2024 சூப்பர் பவுல் இறுதிப் போட்டியின் சராசரி 9,411 டாலரை விட அதிகம். முன்பு அர்ஜென்டினா-இங்கிலாந்து அரையிறுதிக்கு 7,200 டாலர் வரை சென்ற நிலையில், இறுதி ஆட்டம் இன்னும் பெரிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.
அர்ஜென்டினாவின் பயணம்: தென் அமெரிக்காவின் வலிமைமிக்க அணியான அர்ஜென்டினா, 1930, 1978, 1986, 1990, 2014, 2022 உள்ளிட்ட ஆண்டுகளில் இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளது. மூன்று முறை (1978, 1986, 2022) கோப்பையை வென்று, மீண்டும் நான்காவது பட்டத்தை நோக்கி முன்னேறியுள்ளது. இந்தத் தொடரில் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
இதையும் படிங்க: மொத்தமா மாறிய ஆட்டம்..!! பூந்து விளாசிய ஸ்பெயின் வீரர் மெரினோ.. அரையிறுதிக்குள் என்ட்ரி..!!
எகிப்து, இங்கிலாந்து போன்ற அணிகளுக்கு எதிராக பின்தங்கிய நிலையிலிருந்து திரும்பி வென்றது குறிப்பிடத்தக்கது. 39 வயதான லியோனல் மெஸ்சி 8 கோல்கள் மற்றும் 4 அசிஸ்ட்களுடன் முன்னிலை வகிக்கிறார். அவரது அனுபவமும் திறமையும் அணியை ஒருங்கிணைக்கிறது. லவ்டாரோ மார்ட்டினெஸ் (3 கோல்கள்), என்சோ பெர்னாண்டெஸ் உள்ளிட்டோர் துணை நிற்கின்றனர். இருப்பினும் பின்களம் பலவீனமாக உள்ளது.
ஸ்பெயினின் உத்வேகம்: 2010-ல் முதல் முறையாக உலகக் கோப்பையை வென்ற ஸ்பெயின், 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்தத் தொடரில் ஒரு டிரா மட்டுமே; பிரான்ஸை அரையிறுதியில் வீழ்த்தியது சிறப்பு. 19 வயது லமின் யமால் பந்து கடத்தலில் சிறந்து விளங்குகிறார். மைக்கேல் ஒயர்சபால் 5 கோல்களுடன் முன்னிலையில் உள்ளார். பின்களம் மற்றும் கோல்கீப்பர் சைமன் ஆகியோர் வலிமையான பலம். ஸ்பெயின் இதுவரை ஒரு கோல் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளது.
இரு அணிகளும் 60 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையில் மோதுகின்றன. 1966-ல் அர்ஜென்டினா 2-1 என்ற கணக்கில் வென்றது. சர்வதேச மற்றும் நட்பு ஆட்டங்களில் 14 முறை சந்தித்துள்ளன; இரு அணிகளும் சம வெற்றிகளுடன் உள்ளன. இந்த இறுதி ஆட்டம் கால்பந்து ரசிகர்களுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: FIFA World cup 2026: ஸ்பெயின் அசத்தல் வெற்றி..!! போர்ச்சுகலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது..!!