×
 

இதய துடிப்பை எகிற வைத்த ஆட்டம்!! இங்கிலாந்து கோல் மழை!! பிரான்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றி!

பிபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவின் 3வது இடத்திற்கான போட்டியில், இங்கிலாந்து அணி 6-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.

பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 3-வது இடத்திற்கான போட்டி ரசிகர்களுக்கு விறுவிறுப்பான விருந்தாக அமைந்தது. கோல் மழையாக மாறிய இந்த ஆட்டத்தில், இங்கிலாந்து அணி 6-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி 3-வது இடத்தை கைப்பற்றியது.

போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே இங்கிலாந்து ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது. 3-வது நிமிடத்தில் டெக்லான் ரைஸ் முதல் கோலை அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். தொடர்ந்து 18-வது நிமிடத்தில் எஸ்ரி கான்சா மேலும் ஒரு கோல் அடித்ததால் இங்கிலாந்தின் முன்னிலை வலுவடைந்தது.

அதன்பிறகு இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் புக்காயோ சாகா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 37, 45+1 மற்றும் 87-வது நிமிடங்களில் கோல் அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்த அவர், அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

இதையும் படிங்க: உலகக் கோப்பை கால்பந்து திருவிழா! 'ரவுண்ட் - 16' நாக்-அவுட் சுற்று! காலிறுதிக்கு முன்னேறிய அணிகள்!

மறுபுறம், பிரான்ஸ் அணியும் கடுமையாக போராடியது. அந்த அணியின் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே 48 மற்றும் 66-வது நிமிடங்களில் இரட்டை கோல் அடித்து போட்டியை பரபரப்பாக்கினார். மேலும் பார்கோலா 54-வது நிமிடத்திலும், டெம்பேலே கூடுதல் நேரமான 90+6-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இதனால் இறுதி நேரம் வரை போட்டி யார் பக்கம் சாயும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவியது.

ஆனால், போட்டியின் கடைசி தருணத்தில் 90+8-வது நிமிடத்தில் ஜூட் பெலிங்ஹாம் அடித்த கோல் இங்கிலாந்தின் வெற்றியை உறுதி செய்தது. இதன்மூலம் 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்ற இங்கிலாந்து, உலகக் கோப்பை தொடரில் 3-வது இடத்தை தக்க வைத்துக் கொண்டது.

10 கோல்கள் பதிவான இந்த போட்டி, உலகக் கோப்பை தொடரின் மிகவும் பரபரப்பான ஆட்டங்களில் ஒன்றாக ரசிகர்களால் பாராட்டப்பட்டது. சாகாவின் ஹாட்ரிக், எம்பாப்பேயின் இரட்டை கோல் மற்றும் கடைசி நிமிட கோல் என போட்டி முழுவதும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.

இதற்கிடையில், உலகக் கோப்பை இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதும் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் வெற்றி பெறும் அணி உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும்.

இதையும் படிங்க: இங்கிலாந்து டெஸ்ட் அணியில் அதிரடி முடிவு..!! பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து மெக்கல்லம் நீக்கம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share