FIFA World Cup 2026: கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா..??
உலகக்கோப்பை கால்பந்து 1930-ல் இருந்து 4 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது.
மெக்சிகோ நகரில் இன்று (வியாழக்கிழமை) உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்குகிறது. அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்தும் இந்த 23-வது உலகக் கோப்பையில் இதுவரை இல்லாத அளவுக்கு 48 அணிகள் பங்கேற்கின்றன. 12 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள அணிகள், கால்பந்து ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்த உலகக் கோப்பையின் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். பிரிவு நிலையில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகளுடன், மூன்றாம் இடத்தைப் பெறும் சிறந்த எட்டு அணிகளும் இணைந்து 32 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும். அதன் பின்னர் ரவுண்ட் ஆஃப் 16, கால்இறுதி, அரைஇறுதி என போட்டிகள் தொடரும். உச்சக்கட்ட இறுதிப்போட்டி ஜூலை 19 அன்று நியூ ஜெர்சியில் உள்ள புகழ்பெற்ற மெட்லைப் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.
தற்போதைய உலகத் தரவரிசையில் முன்னிலையில் உள்ள பிரான்ஸ், கடைசி சாம்பியன் அர்ஜென்டினா, ஸ்பெயின், இங்கிலாந்து, போர்ச்சுகல் உள்ளிட்ட வலிமைமிக்க அணிகள் கோப்பையை வெல்லும் வாய்ப்பில் பலமான போட்டியாளர்களாகத் திகழ்கின்றன. ஐந்து முறை சாம்பியனான பிரேசில் அணி மீண்டும் தனது பழைய பெருமையை நிலைநாட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், நான்கு முறை பட்டம் வென்ற இத்தாலி அணி தொடர்ந்து மூன்றாவது உலகக் கோப்பைக்கு தகுதி பெறத் தவறியது ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது.
இதையும் படிங்க: புதிய விதிமுறைகளுடன் 23-வது உலகக் கோப்பை கால்பந்து..!! நாளை பிரம்மாண்ட தொடக்கம்..!!
இன்று முதல் நாளில் இரு லீக் போட்டிகள் அரங்கேறுகின்றன. உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு (இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணி) மெக்சிகோ vs தென்ஆப்பிரிக்கா (ஏ பிரிவு) அணிகள் மோதுகின்றன. இரவு 8 மணிக்கு (இந்திய நேரப்படி மறுநாள் காலை 7.30 மணி) தென்கொரியா - செக்குடியரசு அணிகள் மல்லுக்கட்டவுள்ளன.
இம்முறை உலகக் கோப்பைக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.6,240 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது – இது முந்தைய சீசனை விட 50 சதவீதம் அதிகம். சாம்பியன் அணிக்கு ரூ.476 கோடி, இரண்டாம் இடம் ரூ.314 கோடி, மூன்றாவது இடம் ரூ.276 கோடி, நான்காவது இடம் ரூ.257 கோடி கிடைக்கும். லீக் சுற்றோடு வெளியேறும் அணிகளுக்கும் தலா ரூ.86 கோடியும், பங்கேற்கும் ஒவ்வொரு அணிக்கும் ரூ.14.5 கோடி கட்டணமும் வழங்கப்படும்.
1930 முதல் 2022 வரை உருகுவே, இத்தாலி, பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட அணிகள் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. 2026-ல் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பதை நாட்கள் தீர்மானிக்கும்.
இதையும் படிங்க: புதிய விதிமுறைகளுடன் 23-வது உலகக் கோப்பை கால்பந்து..!! நாளை பிரம்மாண்ட தொடக்கம்..!!