வேற லெவல்..!! வங்கதேச டெஸ்டில் மாஸ் காட்டிய ஸ்டார்க்.. கபில் தேவின் சாதனை முறியடிப்பு!!
முதல் நாள் ஆட்டத்திலேயே ஸ்டார்க் மற்றொரு பெரும் சாதனையை நிகழ்த்தினார்.
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில், இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவின் நீண்டகால சாதனையை அவர் முறியடித்தார்.
டார்வின் மராரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 198 ரன்களுக்கே ஆல் அவுட் ஆனது. இது வங்கதேசத்துக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் மிகக்குறைந்த டெஸ்ட் ஸ்கோராகும். அடுத்து வங்கதேச அணி ஆடியபோது, ஸ்டார்க் லிட்டன் தாஸை ரன் எதுவும் எடுக்கவிடாமல் ஆட்டமிழக்கச் செய்தார். இது அவரது 435-வது டெஸ்ட் விக்கெட்டாக அமைந்தது.
இதன் மூலம் 131 போட்டிகளில் 434 விக்கெட்டுகள் எடுத்திருந்த கபில்தேவை அவர் பின்னுக்குத் தள்ளினார். தற்போது ஸ்டார்க் டெஸ்ட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 11-வது இடத்தைப் பிடித்துள்ளார். 106 போட்டிகளிலேயே இந்த சாதனையை எட்டியுள்ள அவர், கபில்தேவை விட 25 போட்டிகள் குறைவாக விளையாடியே முன்னிலை பெற்றுள்ளார். முதல் நாள் ஆட்டத்திலேயே ஸ்டார்க் மற்றொரு பெரும் சாதனையை நிகழ்த்தினார்.
வங்கதேச தொடக்க வீரர் ஷத்மான் இஸ்லாமை அவுட்டாக்கி, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இடதுகைப் பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார். இலங்கையின் ரங்கனா ஹெராத் (433) மற்றும் பாகிஸ்தானின் வசீம் அக்ரம் (414) ஆகியோரின் சாதனைகளை அவர் தகர்த்தார்.
36 வயதான ஸ்டார்க், தனது துல்லியமான ஸ்விங் மற்றும் வேகத்தால் உலக அளவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார். டெஸ்ட் வரலாற்றில் முதல் 10 இடங்களுக்குள் நுழைய அவருக்கு இன்னும் 5 விக்கெட்டுகள் மட்டுமே தேவை. 10-வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெய்ன் 439 விக்கெட்டுகளுடன் உள்ளார். ஒட்டுமொத்தப் பட்டியலில் இலங்கையின் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், ஷேன் வார்னே 708-உடன் இரண்டாவது இடத்திலும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 704-உடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
இந்திய ஜாம்பவான்களான அனில் கும்ப்ளே (619) மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் (537) ஆகியோரும் முன்னணியில் இருக்கின்றனர். ஸ்டார்க்கின் இந்த சாதனை, ஆஸ்திரேலியப் பந்துவீச்சின் தொடர்ச்சியான மேன்மையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. வங்கதேச அணி தற்போது ஆதிக்கம் செலுத்தினாலும், ஸ்டார்க்கின் விக்கெட்டுகள் ஆஸ்திரேலியாவுக்கு நம்பிக்கை அளிக்கின்றன.