பஹல்காம் தாக்குதல் குறித்து பேச்சு.. சூர்யகுமார் யாதவுக்கு 30% அபராதம்.. ICC அதிரடி உத்தரவு..!!
பஹல்காம் தாக்குதல் குறித்து பேசியது தொடர்பாக விசாரணைக்கு ஆஜரான இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு ICC 30 சதவீத அபராதம் விதித்துள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் போது பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியை பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலின் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அர்ப்பணித்த கருத்துக்கு சர்ச்சையில் சிக்கிய இந்திய அணியின் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) விசாரணையில் ஆஜராகினார். இந்த விசாரணை, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (PCB) தாக்கல் செய்த புகாரைத் தொடர்ந்து நடைபெற்றது.
ஆசிய கோப்பை 2025இன் குரூப் ஸ்டேஜ் போட்டியில், கடந்த செப்டம்பர் 14ம் தேதி அன்று துபாயில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் மோதலில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. போட்டி முடிந்த பிறகு, பேட்டி நிகழ்ச்சியில் சூர்யகுமார் யாதவ், "இந்த வெற்றியை பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலின் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அர்ப்பணிக்கிறோம். நம் ஆயுதப்படைகளின் தைரியத்துக்கு நன்றி" என்று கூறினார். அவர், "சில விஷயங்கள் விளையாட்டை விட பெரியவை" என்று கூறியதோடு, பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா உடன் கைகுலுக்க மறுத்துவிட்டார். இந்தக் கருத்துக்கள் அரசியல் நிறைந்தவை என்று PCB குற்றம் சாட்டி, ICC-இல் புகார் அளித்தது.
இதையும் படிங்க: என் தெய்வத்துக்கே மாறுவேஷமா..!! தரவரிசையில் 8வது இடத்திற்கு சரிந்த இங்கிலாந்து அணி..!
பஹல்காம் தாக்குதல், ஏப்ரல் மாதம் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்றது. இதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்தியா, பாகிஸ்தானை குற்றம் சாட்டி, மே மாதம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பதிலடி தாக்குதலை நடத்தியது. இதன் பிறகு இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மோசமடைந்தது. இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் மோதல்கள், இத்தாக்குதலுக்குப் பிறகு முதல் முறையாக ஆசிய கோப்பையில் நடைபெற்றன.
நேற்று நடைபெற்ற ICC விசாரணையில், சூர்யகுமார் யாதவ், பிசிசிஐ CEO ஹேமாங் ஆமின் மற்றும் கிரிக்கெட் செயல்பாடுகள் மேலாளர் சம்மர் மல்லாப்பூர்கர் ஆகியோருடன் ஆஜரானார். அவர், நான் தவறாக எதையும் சொல்லவில்லை (not guilty) என்று கூறினார். ICC கோட் ஆஃப் கண்டக்ட் பிரிவு 1.3-ன் படி, அரசியல் தொடர்பான தனிப்பட்ட செய்திகளை விளையாட்டில் வெளிப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. ரிச்சர்ட்சன், "இது விளையாட்டைப் பாதிக்கும் செயல்" என்று கூறி, யாதவை அரசியல் கருத்துக்களைத் தவிர்க்கும்படி எச்சரித்தார். இதனிடையே PCB-இன் புகாருக்கு பதிலாக, BCCI-யும் ஆசிய கோப்பை சூப்பர் ஃபோர் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் ஹாரிஸ் ரவுஃப் மற்றும் சாஹிப்சதா ஃபர்ஹானின் சர்ச்சைக்குரிய சைகைகளுக்கு எதிராக ICC-இல் புகார் அளித்தது.
இந்நிலையில் ICC மேட்ச் ரெஃபரி ரிச்சி ரிச்சர்ட்சன், இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு 30 சதவீத அபராதம் விதித்து உத்தரவிட்டார். இது அவரது போட்டிக் கட்டணத்தின் 30% என்பதால், சுமார் 1.35 லட்சம் ரூபாய் (மதிப்பீட்டு அடிப்படையில்) அபராதமாக வசூலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தீர்ப்பு, கிரிக்கெட்டின் அரசியல் அல்லாத தன்மையைப் பாதுகாக்கும் ஐசிசி விதிகளுக்கு மீறியதாகக் கருதப்பட்டதே. இதே போல் இந்திய அணிக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் ஹாரிஸ் ரவுஃப் மற்றும் சாஹிப்சதா ஃபர்ஹான் ஆகியோர் நடத்தை விதிகளை மீறியதை ஐசிசி உறுதி செய்து, இருவருக்கும் போட்டி கட்டணத்தில் 30% அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்திய ரசிகர்கள் இத்தீர்ப்பை விமர்சித்து வருகின்றனர். "சூர்யாவின் உணர்ச்சி இயல்பானது; அது தேசபக்தி" என்று சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகுகிறது. அதேசமயம், ஐசிசி விதிகள் கிரிக்கெட்டை உலகளாவியதாக வைத்திருக்க வேண்டும் என விமர்சகர்கள் கூறுகின்றனர். சூர்யகுமார் யாதவ், இந்திய அணியின் முக்கியமான பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் இருக்கும் நிலையில், இந்தச் சம்பவம் அவரது தலைமைத்துவத்தை சோதிக்கிறது. BCCI ஆதரவு தெரிவித்து, "சூர்யாவின் கருத்து உணர்ச்சிமிக்கது, அரசியல் இல்லை" என்று கூறியுள்ளது.
இதையும் படிங்க: 2025 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்.. பரிசுத்தொகையை அறிவித்த ICC..!!