×
 

இந்திய கார்களின் பாதுகாப்பு தரம் இனி எப்படி இருக்கும்? வருகிறது Bharat NCAP 2.0!!

தற்போது நடைமுறையில் உள்ள திட்டம் பெரும்பாலும் மோதலின் போது பயணிகளுக்கு ஏற்படும் பாதிப்பை மட்டும் மதிப்பிடுகிறது.

இந்தியாவில் சாலை விபத்துகள் உலக அளவில் அதிகமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, பாரத் புதிய கார் மதிப்பீட்டுத் திட்டத்தின் (Bharat NCAP) அடுத்த கட்டத்தை அறிவித்துள்ளார். அக்டோபர் 2027 முதல் செயல்படவிருக்கும் பாரத் என்சிஏபி 2.0, தற்போதைய கிராஷ் டெஸ்ட் மைய அணுகுமுறையை விரிவுபடுத்தி, விபத்துத் தவிர்ப்பு, பயணிகள் பாதுகாப்பு, பாதசாரிகள் பாதுகாப்பு மற்றும் விபத்துக்குப் பிறகான வெளியேற்றம்-பராமரிப்பு ஆகிய நான்கு முக்கிய அம்சங்களை உள்ளடக்கும்.

தற்போது நடைமுறையில் உள்ள திட்டம் பெரும்பாலும் மோதலின் போது பயணிகளுக்கு ஏற்படும் பாதிப்பை மட்டும் மதிப்பிடுகிறது. புதிய பதிப்பில், தானியங்கி அவசர பிரேக்கிங் (AEB), லேன் டெபார்ச்சர் வார்னிங் போன்ற ADAS தொழில்நுட்பங்களின் திறன் தீவிரமாக சோதிக்கப்படும். மேலும், காரின் முன் பகுதி வடிவமைப்பு பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு குறைந்த காயத்தை ஏற்படுத்துகிறதா என்பதும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். 

இந்திய ஸ்டார்ட்அப்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் உருவாக்கும் புதிய பாதுகாப்பு தொழில்நுட்பங்களும் மதிப்பீட்டில் இணைக்கப்படும். மதிப்பீடு 100 புள்ளி அடிப்படையில் நடைபெறும். கிராஷ் பாதுகாப்புக்கு 55 புள்ளிகள், பாதசாரி மற்றும் பாதிப்புக்குள்ளாகும் சாலைப் பயனர்களுக்கு 20, பாதுகாப்பான ஓட்டுநர் அம்சங்களுக்கு 10, விபத்துத் தவிர்ப்பு தொழில்நுட்பத்திற்கு 10, விபத்துக்குப் பிறகான பாதுகாப்புக்கு 5 புள்ளிகள் ஒதுக்கப்படும். 

இதையும் படிங்க: மிவி நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன்.. மிவி ஒன் 5ஜி விரைவில் இந்திய சந்தையில்!!

ஐந்து நட்சத்திர மதிப்பீடு பெற 2027 முதல் குறைந்தபட்சம் 70 புள்ளிகள் தேவை; 2029 முதல் இது 80 ஆக உயர்த்தப்படும். இந்தியாவில் சோதனைச் செலவு சுமார் ரூ.60 லட்சம் மட்டுமே. உலகளாவிய என்சிஏபி மையங்களில் இது ரூ.2.5 கோடி வரை ஆகும். இதனால் பல வெளிநாட்டு நிறுவனங்களும் இந்தியாவில் சோதனை செய்ய ஆர்வம் காட்டுகின்றன. இதுவரை 11 நிறுவனங்களின் 30க்கும் மேற்பட்ட மாடல்கள் சான்றிதழ் பெற்றுள்ளன.

வாகன பாதுகாப்புடன் ஓட்டுநர் பொறுப்பையும் உயர்த்த, கிரேடட் பாயிண்ட்ஸ் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. விதிமீறல்களுக்கு புள்ளிகள் குறையும்; வரம்பு மீறினால் உரிமம் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ ரத்து செய்யப்படும். நல்ல ஓட்டுநர்களுக்கு காப்பீட்டு சலுகைகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

ஆண்டுதோறும் சுமார் 5 லட்சம் விபத்துகள் மற்றும் 1.80 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படும் இந்தியாவில், இளம் வயதினரே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். வாகன கட்டுமான பாதுகாப்பையும் ஓட்டுநர் நடத்தையையும் ஒரே நேரத்தில் மேம்படுத்தும் இந்த நடவடிக்கைகள், சாலை விபத்துகளையும் உயிரிழப்புகளையும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஐ.ஓ.எஸ். பயனர்களுக்கு புதிய அப்டேட்..!! AI Content Label-ஐ அறிமுகப்படுத்தும் வாட்ஸ்அப்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share