EV, CNG வாகன உரிமையாளர்களுக்கு குட் நியூஸ்: ஆயுட்காலம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு!
விண்ணப்பப் படிவம் 46 மற்றும் அனுமதி படிவம் 47 ஆகியவை முழுமையாக ஆன்லைனாக மாற்றப்படும்.
மின்சார, ஹைட்ரஜன் மற்றும் சிஎன்ஜி போன்ற சுற்றுச்சூழல் நட்பு வணிக வாகனங்களை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (MoRTH) மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989-ல் முக்கிய திருத்தங்களை முன்மொழிந்துள்ளது. இதன்படி, தேசிய அனுமதி (நேஷனல் பெர்மிட்) பெறும் இந்த வாகனங்களின் பயன்பாட்டு ஆயுட்காலம் மேலும் ஐந்து ஆண்டுகள் நீட்டிக்கப்படும்.
தற்போது மல்டி-ஆக்சில் சரக்கு வாகனங்களுக்கு 15 ஆண்டுகளும், பிற சரக்கு வாகனங்களுக்கு 12 ஆண்டுகளும் அதிகபட்ச வரம்பாக உள்ளது. வரைவு விதிகள் நிறைவேறினால் இவை முறையே 20 மற்றும் 17 ஆண்டுகளாக உயரும். இது அனைத்து வணிக வாகனங்களுக்கும் பொதுவானதல்ல; பேட்டரி, ஹைட்ரஜன் மற்றும் இயற்கை எரிவாயு இயக்க வாகனங்களுக்கு மட்டும் பொருந்தும். இதன் மூலம் உரிமையாளர்கள் நீண்ட காலம் வர்த்தக ரீதியாக பயன்படுத்த முடியும்.
சுத்தமான போக்குவரத்தை ஊக்குவிக்கும் அரசின் முயற்சியின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.மேலும், நேஷனல் பெர்மிட்டை ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லாமல், விருப்பமுள்ளவர்கள் ஒரே நேரத்தில் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு எலக்ட்ரானிக் முறையில் பெறலாம். கட்டணம் ஓராண்டுக்கு ₹16,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் ஐந்தாண்டுக்கு மொத்தம் ₹82,500 ஆகும். விண்ணப்பப் படிவம் 46 மற்றும் அனுமதி படிவம் 47 ஆகியவை முழுமையாக ஆன்லைனாக மாற்றப்படும்.
தற்காலிகப் பதிவு விதிகளிலும் தளர்வுகள் உண்டு. பாடி கட்டப்படாத சேஸிஸ் வாகனங்களுக்கு ஆறு மாதங்கள் செல்லுபடியாகும்; தேவைப்பட்டால் 30 நாட்கள் வீதம் நீட்டிப்பு கிடைக்கும். வேறு மாநிலப் பதிவு அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனங்களுக்கு 45 நாட்கள் வரை அனுமதி உண்டு. வாகன் போர்ட்டலுடன் முழு இணைப்பு மூலம் டீலர் சான்றிதழ் அல்லது வாகன எண் கொடுத்தாலே உரிமையாளர் விவரங்கள், ஜிஎஸ்டி, பான், உத்யம் ஆதார், நிறுவன அடையாள எண் போன்றவை தானாகப் பதிவாகும்.
பதிவுப் படிவம் 20-ல் ஆதாருடன் இணைந்த மொபைல் எண் கட்டாயம். படிவம் 48-ல் இன்சூரன்ஸ், புகைப் பரிசோதனை, ஃபிட்னஸ் மற்றும் நிலுவை அபராதங்கள் ஒரே பக்கத்தில் சரிபார்க்கப்படும். ஆகஸ்ட் 10 அளவில் வெளியிடப்பட்ட இந்த வரைவுக்கு 30 நாட்கள் பொதுக் கருத்துக்கள் கோரப்பட்டுள்ளன. இறுதி அறிவிப்புக்குப் பிறகே அமலாகும். டிஜிட்டல் செயல்முறைகளால் காகிதப் பயன்பாடு குறைந்து அலைச்சல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் வணிகர்களுக்கு செலவுச் சேமிப்பையும் அளிக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.