×
 

இனி நெட் வேண்டாம்.. பட்டன் ஃபோன்லையும் பணம் அனுப்பலாம்..!! ஃபோன்பேவில் வந்தாச்சு புதிய வசதி!!

இணையவசதி இல்லாமலேயே பணம் அனுப்பும் புதிய வசதியை போன்பே அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்து வரும் நிலையில், ஸ்மார்ட்போன் இல்லாதவர்களும் எளிதாக யுபிஐ சேவையை பயன்படுத்தும் வகையில் போன்பே நிறுவனம் முக்கியமான புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘போன்பே யுபிஐ 123பே’ என்ற இந்த சேவை, சாதாரண பட்டன் போன்கள் (பிச்சர் போன்கள்) மூலமாகவே பணம் அனுப்பவும், பெறவும், கடைகளில் கட்டணம் செலுத்தவும் வழிவகுக்கிறது. 

இணைய இணைப்பு தேவையில்லாமல் எஸ்எம்எஸ் அடிப்படையிலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செயல்படுவது இதன் முக்கிய சிறப்பம்சம். நாட்டில் சுமார் 20 கோடிக்கும் அதிகமானோர் இன்னும் சாதாரண மாடல் மொபைல் போன்களையே பயன்படுத்தி வருகின்றனர். கிராமப்புறங்கள், தொலைதூரப் பகுதிகள் மற்றும் 2ஜி நெட்வொர்க் மட்டுமே கிடைக்கும் இடங்களில் வசிப்பவர்களுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக அமையும். 

போன்பே இந்த சேவையை முதலில் நோக்கியா, எச்எம்டி, லாவா மற்றும் ஐடெல் போன்ற நிறுவனங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டன் போன்களில் முன்பே நிறுவியுள்ளது. வரும் காலங்களில் மேலும் பல மொபைல் நிறுவனங்களுடன் இணைந்து இந்த வசதியை விரிவுபடுத்தும் என அறிவித்துள்ளது. இந்த சேவையைப் பயன்படுத்த ஸ்மார்ட்போன் அல்லது தரவு இணைப்பு தேவையில்லை. ஆதரவுள்ள போனில் முன்பே உள்ள போன்பே செயலியைத் திறந்து, நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு, தங்கள் வங்கியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 

பின்னர் டெபிட் கார்டின் கடைசி ஆறு இலக்கங்களும் காலாவதி தேதியும் உள்ளிட்டு யுபிஐ பின்னை அமைத்துக்கொண்டால் உடனடியாக யுபிஐ ஐடி செயல்படும். இதற்குப் பிறகு மொபைல் எண் அல்லது யுபிஐ ஐடி மூலம் மற்றவர்களுக்கு பணம் அனுப்பலாம். கேமரா உள்ள போன்களில் க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து கடைகளில் பணம் செலுத்தவும் முடியும். கணக்கு இருப்பைப் பார்க்கவும், பரிவர்த்தனை வரலாற்றை அறியவும் இயலும்.

மேலும், ஆங்கிலம் உள்ளிட்ட 12 இந்திய மொழிகளில் குரல் உதவி (ஏஐ ஹெல்ப்லைன்) வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இது முதல் முறை பயனர்களுக்கு பதிவு செய்வதையும் அடிப்படை செயல்பாடுகளையும் எளிதாக்கும். வருங்காலத்தில் மின்சாரக் கட்டணம், மொபைல் ரீசார்ஜ், ஆதார் அடிப்படையிலான பதிவு போன்ற கூடுதல் வசதிகளும் சேர்க்கப்படும் என போன்பே தெரிவித்துள்ளது.

இந்த முயற்சி நிதி உள்ளடக்கத்தை (financial inclusion) மேம்படுத்தி, டிஜிட்டல் பொருளாதாரத்தில் அனைவரையும் இணைக்கும் நோக்கில் அமைந்துள்ளது. பெட்டிக்கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை யுபிஐ பரவியுள்ள இன்றைய சூழலில், பட்டன் போன் பயனர்களும் இதில் பங்கேற்க இந்த சேவை புதிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது.

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share