விலையும் பட்ஜெட்.. அம்சங்களும் மாஸ்!! 6000mAh பேட்டரி, 50MP கேமராவுடன் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்!!
6000mAh பேட்டரி 18 வாட் சார்ஜிங்குடன் நீண்ட நேர பயன்பாட்டை உறுதி செய்கிறது.
ஆடியோ தயாரிப்புகளுக்காக அறியப்பட்ட மிவி நிறுவனம், ஸ்மார்ட்போன் பிரிவில் அடியெடுத்து வைத்துள்ளது. அதன் முதல் மாடலான மிவி ஒன் 5ஜி இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. பட்ஜெட் பிரிவில் போட்டியிடும் இந்த 5ஜி போன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட், உயர் திறன் கொண்ட கேமரா மற்றும் நீண்ட ஆயுள் கொண்ட பேட்டரி ஆகியவற்றை இணைத்து வழங்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் 6.74 இன்ச் HD+ டிஸ்ப்ளேயுடன் வருகிறது. 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் மற்றும் 2.5D கவர் கிளாஸ் அம்சங்கள் பயனர்களுக்கு மென்மையான பார்வை அனுபவத்தை அளிக்கின்றன. 4 நானோமீட்டர் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் இதை இயக்குகிறது. அதிகபட்சம் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. மூன்று வகைகளாக 4ஜிபி+128ஜிபி, 6ஜிபி+128ஜிபி மற்றும் 8ஜிபி+128ஜிபி என வழங்கப்படுகிறது.
புகைப்படம் எடுப்பதற்கு 50MP பிரைமரி கேமரா PDAF உடன் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது லென்ஸ் மற்றும் 8MP செல்ஃபி கேமராவும் இதில் உள்ளன. போக்குவரத்து நெரிசல் மிக்க இடங்களில் அழைப்புகளின் போது சத்தத்தை குறைத்து குரலை தெளிவாக கேட்க உதவும் மிவி நியூரல் வாய்ஸ் என்ஜின் சிறப்பம்சமாக இடம்பெற்றுள்ளது. 6000mAh பேட்டரி 18 வாட் சார்ஜிங்குடன் நீண்ட நேர பயன்பாட்டை உறுதி செய்கிறது.
ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்துடன் வரும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு 18 வரை அப்டேட்கள் வழங்கப்படும் என நிறுவனம் உறுதியளித்துள்ளது. புளூ, பர்கண்டி, பின்க், கிரீன் மற்றும் நேவி புளூ ஆகிய ஐந்து நிறங்களில் கிடைக்கிறது. விலை விவரங்களின்படி, 4ஜிபி ரேம்+128ஜிபி மாடல் ரூ.14,999, 6ஜிபி+128ஜிபி ரூ.15,999 மற்றும் 8ஜிபி+128ஜிபி ரூ.16,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையில் இவை முறையே ரூ.11,999, ரூ.12,999 மற்றும் ரூ.13,999 ஆக கிடைக்கும். முதல் விற்பனை ப்ளிப்கார்ட்டில் தொடங்குகிறது. மிவியின் இந்த அறிமுகம், பட்ஜெட் 5ஜி போன் பிரிவில் புதிய போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.