ஆண்டு விழா ஸ்பெஷல் ஆஃபர்.. ஜியோவின் புதிய வருடாந்தர சலுகை அறிவிப்பு..!!
இந்த ரீசார்ஜ் உடன் 12 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 10 ஜிபி டேட்டா வீதம் 120 ஜிபி டேட்டா போனஸ் வழங்கப்படுகிறது.
செப்டம்பர் 2016-இல் வர்த்தக ரீதியான சேவைகளைத் தொடங்கிய ரிலையன்ஸ் ஜியோ, தற்போது தனது 10-ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் சிறப்பு வருடாந்திர பிரீபெயிட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
‘மெகா ஆனிவர்சரி ஆஃபர்’ என்ற பெயரில் வழங்கப்படும் இந்த ரூ.3,599 திட்டம், வழக்கமான இணைப்பு வசதிகளுடன் செயற்கை நுண்ணறிவு, கிளவுட் சேமிப்பு மற்றும் டிஜிட்டல் பொழுதுபோக்கு சலுகைகளை ஒருங்கிணைத்து வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 365 நாட்கள்.
தினசரி 2.5 ஜிபி அதிவேக 4ஜி டேட்டா (ஆண்டுக்கு மொத்தம் சுமார் 912.5 ஜிபி), தகுதியுள்ள பயனர்களுக்கு அன்லிமிட்டெட் 5ஜி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்.எம்.எஸ். ஆகியவை அடிப்படைப் பலன்கள். கூடுதலாக, ஒவ்வொரு மாதமும் 10 ஜிபி வீதம் 12 மாதங்களுக்கு மொத்தம் 120 ஜிபி போனஸ் டேட்டா வழங்கப்படுகிறது. இதனால் ஆண்டு முழுவதும் அதிக அளவிலான டேட்டா பயன்பாடு சாத்தியமாகிறது.
இதையும் படிங்க: ஜிடிஏ 6 ரசிகர்களுக்கு குட் நியூஸ்: பிரத்யேக பிஎஸ்5 டூயல்சென்ஸ் கன்ட்ரோலர்கள் அறிமுகம்!!
டிஜிட்டல் சேவைகளில், கூகுள் ஜெமினி ப்ரோவுக்கான 18 மாத சந்தா (மதிப்பு சுமார் ரூ.35,100) முக்கியமானதாகும். இதில் 5,000 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் நானோ பனானா போன்ற ஏ.ஐ. கருவிகளுக்கான அணுகல் அடங்கும். மேலும், ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (ஹாலிவுட் உள்ளடக்கம் உள்பட) ஒரு வருட சந்தா, ஜியோடிவி ப்ரோ பேக் (1,000-க்கும் மேற்பட்ட நேரடி தொலைக்காட்சி சேனல்கள்) மற்றும் ஜியோஏஐகிளவுட்டில் கூடுதல் 50 ஜிபி இலவச சேமிப்பு வசதியும் கிடைக்கிறது.
பயணம் மற்றும் வாழ்க்கைமுறை சலுகைகளாக, ஈஸிமைட்ரிப் மூலம் விமானம் மற்றும் ஓட்டல் முன்பதிவுகளுக்கு ரூ.2,200 வரை தள்ளுபடி வவுச்சர், அஜியோவில் ரூ.200 தள்ளுபடி மற்றும் சினிபோலிஸ் திரையரங்குகளில் ரூ.150 தள்ளுபடி வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன. இந்தச் சலுகை மைஜியோ செயலி, ஜியோ அதிகாரப்பூர்வ வலைதளம், டிஜிட்டல் தளங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள் வழியாகக் கிடைக்கிறது.
ஜியோ தலைவர் ஆகாஷ் அம்பானி, நிறுவனத்தின் பத்தாண்டுப் பயணத்தை நினைவுகூர்ந்து, “இன்று ஜியோ ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தை விட மேலானதாகத் திகழ்கிறது. இணைப்பு வசதி, டிஜிட்டல் தயாரிப்புகள், நிறுவனத் தீர்வுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகளில் இந்தியாவிலேயே சொந்தத் தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறோம்.
இவற்றின் பலன்களை பெருமளவில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதும், உலகளாவிய நிலைக்குக் கொண்டு செல்வதும் எங்கள் இலக்கு” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவைத் தொடர்ந்து சர்வதேச சந்தையிலும் தனது தொழில்நுட்பத் தீர்வுகளை விரிவுப்படுத்தும் திட்டங்களை ஜியோ முன்னெடுத்து வருகிறது.