×
 
☰

வாட்ஸ்அப் பயனர்களுக்கு குட் நியூஸ்!! மெசேஜ்களை இனி Schedule செய்யலாம்!! வரப்போகும் அசத்தல் அப்டேட்!!

எனினும், இதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலியில், பயனர்களின் வசதியை மேம்படுத்தும் வகையில் புதிய அம்சம் ஒன்று அறிமுகமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பயனர்கள் தாங்கள் அனுப்ப வேண்டிய மெசேஜ்களை முன்கூட்டியே எழுதி, குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் தானாக அனுப்பும் வகையில் Schedule Messages என்ற வசதியை வாட்ஸ்அப் உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.

தற்போது இந்த அம்சம் சில ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களிடம் சோதனை செய்யப்பட்டு வருவதாக WABetaInfo தெரிவித்துள்ளது. சோதனைகள் வெற்றிகரமாக முடிந்தால், வரும் வாரங்களில் மேலும் பல பயனர்களுக்கு இந்த வசதி விரிவுபடுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

எப்படி செயல்படும் இந்த வசதி? 

இந்த புதிய அம்சம் அறிமுகமானால், பயனர்கள் ஒரு செய்தியை உடனடியாக அனுப்ப வேண்டிய அவசியம் இருக்காது. மாறாக, அனுப்ப வேண்டிய செய்தியைத் தட்டச்சு செய்து, அதனை அனுப்ப வேண்டிய தேதி மற்றும் நேரத்தைத் தேர்வு செய்யலாம். குறிப்பிட்ட நேரம் வந்ததும் அந்தச் செய்தி தானாகவே அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: எதிர்பார்ப்பை எகிற வைக்கும் புதிய கேமிங் ஸ்மார்ட்போன்!! ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட இன்ஃபினிக்ஸ்!!

WABetaInfo வெளியிட்ட தகவல்களின்படி, ஆண்ட்ராய்டு வாட்ஸ்அப் பீட்டா பதிப்பு 2.26.40.7 பயன்படுத்தும் சில பயனர்களுக்கு இந்த அம்சம் வழங்கப்பட்டு வருகிறது. செய்தியைத் தட்டச்சு செய்த பிறகு, அனுப்பும் பொத்தானை அழுத்திப் பிடிப்பதன் மூலம் தேதி மற்றும் நேரத்தைத் தேர்ந்தெடுக்கும் வசதி கிடைக்கலாம்.

புகைப்படம், வீடியோவையும் திட்டமிடலாம்!

குறுஞ்செய்திகள் மட்டுமின்றி, இணைப்புகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் முன்கூட்டியே திட்டமிட்டு அனுப்பும் வசதி கிடைக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. புகைப்படம் அல்லது வீடியோவைத் தேர்வு செய்த பிறகு, அதனைத் திருத்துவது மற்றும் விளக்கக் குறிப்பைச் சேர்ப்பது போன்ற வசதிகளும் இடம்பெற வாய்ப்புள்ளது. ஒரே நேரத்தில் ஒரு புகைப்படம் அல்லது வீடியோவை மட்டுமே திட்டமிட முடியும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் இரண்டு வாரங்கள் வரை செய்திகளைத் திட்டமிட முடியும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த வரம்புகள் இறுதி வெளியீட்டில் மாறக்கூடும்.

ஆஃப்லைனில் இருந்தாலும் மெசேஜ் அனுப்பப்படுமா?

இந்த அம்சத்தின் முக்கிய சிறப்பம்சமாக, திட்டமிட்ட நேரத்தில் அனுப்புபவரின் ஸ்மார்ட்போன் ஆஃப்லைனில் இருந்தாலும் அல்லது செயலி மூடப்பட்டிருந்தாலும் செய்தி தானாக அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எவ்வாறு தொழில்நுட்ப ரீதியாகச் செயல்படும் என்பது குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

தனிநபர் உரையாடல்கள் மட்டுமின்றி, குரூப் சாட்களிலும் இந்த வசதி செயல்படலாம். திட்டமிடப்பட்ட செய்தியை அனுப்புவதற்கு முன்பு சரிபார்க்கவும், தேவைப்பட்டால் நீக்கவும் வசதி கிடைக்கலாம். இதற்காக சாட் தகவல் பகுதியில் தனிப் பிரிவும் இடம்பெற வாய்ப்புள்ளது.

யாருக்கு பயனுள்ளதாக இருக்கும்?

பிறந்தநாள் வாழ்த்துகள், முக்கியமான நினைவூட்டல்கள், அலுவலகத் தகவல்கள் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் அனுப்ப வேண்டிய செய்திகள் போன்றவற்றுக்கு இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும். தற்போது இந்த அம்சம் சோதனைக் கட்டத்தில் இருப்பதால், அனைத்து பயனர்களுக்கும் எப்போது கிடைக்கும் என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பிறகே தெரியவரும்.

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share