புதுச்சேரியில் விஜய்யின் மக்கள் சந்திப்பு நடக்கவுள்ள இடத்திற்கு முன்னால் குவிந்த ஏராளமான தவெக தொண்டர்கள் கேட்டை உடைத்துக் கொண்டு தள்ளு,முள்ளில் ஈடுபட்டதால் தற்போது க்யூ ஆர் கோர்ட் கூப்பன்களை பரிசோதிக்காமலேயே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 110 பேர் கடுமையாக காயமடைந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடையச் செய்தது. அதற்குப் பிறகு கிட்டத்தட்ட ஒன்றரை மாத காலம் மக்கள் சந்திப்பு தள்ளி போடப்பட்ட நிலையில், அண்மையில் காஞ்சிபுரத்தில் உள்ளரங்கத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ரோடு ஷோவுக்கு அனுமதி கிடைக்காது என்பதால், புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டார். ஆனால் புதுச்சேரி காவல்துறையோ ரோடு ஷோ நடத்த அனுமதி தர முடியாது, வேண்டுமானால் பொதுக்கூட்டம் நடத்திக்கொள்ளுங்கள் என அனுமதி வழங்கியது.
இதைத் தொடர்ந்து இன்று தவெக பொதுக்கூட்டம் புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் நடைபெறுகிறது. புதுச்சேரி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த, கியூ ஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வைத்திருக்கும் 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் கர்ப்பிணிகள், குழந்தைகளுடன் வருபவர்கள், முதியோர்களுக்கு அனுமதி இல்லை என பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இன்று அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான தவெக தொண்டர்கள் பொதுக்கூட்டம் நடக்கும் நுழைவாயில் முன்பு குவிந்த நிலையில், 8 மணிக்கு மேலாக பாஸ் இருப்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: புதுவையில் விஜய்... அண்ணனை பார்க்கணும்... ஆர்ப்பரிக்கும் தொண்டர்கள்... உற்சாகம்...!
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த கூட்டத்திற்கு அனுமதி இல்லை என்று போலீசார் ஏற்கனவே தெரிவித்தனர். தற்போது கடலூர் - புதுச்சேரி சாலையில் முள்ளோடை பகுதியில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இரண்டு சக்கர வாகனம், கார், வேன், பஸ் என அனைத்து வாகனங்களையும் நிறுத்தி போலீசார் சோதனையில் ஈடுபடுத்திய பின்னரே அனுமதித்தனர். கடலூரில் இருந்து புதுச்சேரி வரும் 23 கிலோமீட்டர் தொலைவில் ஒவ்வொரு 5 கிலோ மீட்டருக்கும் சோதனையானது நடைபெற்றது. அதேபோல் பொதுக்கூட்ட மைதானத்திற்கு ஒரு கிலோ மீட்டர் முன்னதாகவே பேரி கார்டுகள் அமைக்கப்பட்டு புதுச்சேரி போலீசார் பாஸ் இருப்பவர்களை மட்டுமே உள்ளே அனுமதித்து வந்தனர்.
இதனிடயே, புதுவை உப்பளம் மைதானத்தில் த.வெ.க தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெறும் நுழைவாயில் முன்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உடன் அனுமதி அட்டையில்லாமல் ஒரு கூட்டத்தை உள்ளே அழைத்து செல்ல முயன்றார். அப்போது போலீசாருக்கும் தவெகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் கேட்டை பூட்டிய போலீசார், பாஸ் வைத்திருப்பவர்களை மட்டும் உள்ளே அனுப்பினர். இதில் மேலும் ஒரு குழப்பமாக புதுச்சேரியில் பாஸ் வழங்கும் போது ஒரு க்யூ ஆர் கோடு உடன் அடையாள அட்டைக்கு இரண்டு பேர் வரலாம் என தவெக நிர்வாகிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அடையாள அட்டை வைத்துள்ள ஒருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் கடுப்பான தவெக தொண்டர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வேறு வழியின்றி பாஸ் இல்லாதவர்களையும் தொடர்ந்து போலீசார் உள்ளே அனுமதிக்க வேண்டிய சூழ்நிலை உருவானது.
இதையும் படிங்க: முண்டியடிக்கும் தவெக தொண்டர்கள்... போலீசார் தடியடி..! பதற்றம்..!