×
 

பண்ணை வீட்டில் பாரதிராஜா உடல்... இன்று மாலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம்... உறவினர்கள், பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி...!

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடல் சொந்த ஊரான தேனிக்கு எடுத்துச் செல்லப்பட்டது

சென்னையில் காலமான இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடல், அவரது சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து, உடல் சிறப்பு வாகனத்தில் தேனி நோக்கி புறப்பட்டது.

84 வயதான பாரதிராஜா, தமிழ் சினிமாவில் கிராமிய கதைகளை மையமாகக் கொண்டு புதிய பாதையை உருவாக்கிய இயக்குநராகப் போற்றப்படுகிறார். ஆறு தேசிய விருதுகள், பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்ற அவர், இந்திய திரைப்பட உலகின் முக்கிய ஆளுமைகளில் ஒருவராக விளங்கினார்.

நேற்று காலை முதலே அவரது உடல் சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். திரைத்துறையைச் சேர்ந்த நடிகர்கள் மற்றும் இயக்குநர்களும் நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, சிவக்குமார், சத்யராஜ், பிரபு, கார்த்திக், கவுண்டமணி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். நடிகைகள் ராதிகா சரத்குமார், ரேவதி, ரேகா, ராதா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர். இயக்குநர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஆர்.கே. செல்வமணி, பேரரசு, ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிங்க: திடீர் உடல்நலக்குறைவு... பாரதிராஜாவின் கடைசி நிமிடத்தில் நடந்தது என்ன?... அருகில் இல்லாத மனைவி, மகள்...!

மேலும், பிற மாநிலங்களைச் சேர்ந்த திரைப்பட பிரபலங்களான மோகன்லால், மம்முட்டி, சிரஞ்சீவி உள்ளிட்டோரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பாரதிராஜாவின் உடல், அவரது இறுதி விருப்பத்தின்படி தேனி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மலேசியாவில் இருந்தபோது தனது இறுதி சடங்குகள் சொந்த ஊரிலேயே நடைபெற வேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்திருந்ததாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள அவரது தோட்டத்தில் இன்று மாலை 3 மணிக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது. அங்கு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இதற்காக நேற்று இரவு 9 மணிக்கு சென்னையில் இருந்து சிறப்பு வாகனம் மூலமாக பாரதிராஜா உடல் தேனிக்கு கொண்டு செல்லப்பட்டது. 

இந்நிலையில், இன்று காலை அவரது உடல் தேனி மாவட்டம் காற்றோடு பகுதியில் உள்ள பண்ணை வீட்டை வந்தடைந்தது. அங்கு பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பண்ணை வீட்டின் முன்பாக மேடை அமைக்கப்பட்டு, அங்கு கண்ணாடிப் பெட்டியில் உடல் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தனி வழியும், முக்கிய பிரமுகர்களுக்காக தனி வழியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணிக்காக இரண்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் (ஏடிஎஸ்பி) தலைமையில் 767 காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பண்ணை வீடு மற்றும் காற்றோடு பகுதி முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வருகை அதிகரிக்கும் பட்சத்தில், காற்றோடு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க மாற்றுப் பாதை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கொடைக்கானலுக்கு செல்லும் முக்கிய சந்திப்புப் பகுதியாக காற்றோடு இருப்பதால், போக்குவரத்து மேலாண்மைக்கான சிறப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் வழக்கமான குடும்பச் சம்பிரதாயங்கள் நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. திரையுலக பிரபலங்களும் பெருமளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்கான அனைத்து பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: என் இனிய தமிழ் மக்களே...!! - மறைந்தார் இயக்குநர் இமயம் பாரதிராஜா... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share