கிங்காங் மகளை நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய நடிகர் சிவகார்த்திகேயன்..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!
கிங்காங் மகளை நேரில் சந்தித்து வாழ்த்துகளை நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவின் காமெடி உலகில், கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபலமாக இருந்து வருபவர் தான் நடிகர் கிங்காங். இவர் தனது தனித்துவமான நடிப்பு மற்றும் நடனத் திறமையால் ரசிகர்களின் மனதில் பல வருடங்களுக்கும் மேலாக இடம்பிடித்தவர். குறிப்பாக, அதிசய பிறவி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து ஆடிய இவரது நடனம், அவரை பட்டிதொட்டி எங்கும் உள்ள ரசிகர்களிடையே பிரபலமடைய செய்தது. இதனைத் தொடர்ந்து, வடிவேலு உடனான இவரது அற்புதமான காமெடி காட்சிகள் மற்றும் ஏராளமான திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ள இவர், இன்று வரை தமிழ் சினிமாவின் நம்பகமான கதாபாத்திர நடிகர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார்.
இப்படி இருக்க சமீபத்தில், கிங்காங் தனது மகளுக்கான திருமண விழாவை விமர்சையாக நடத்தியிருந்தார். இந்த விழாவுக்காக அவர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களுக்கு நேரிலேயே சென்று அழைப்பிதழ் வழங்கினார். அந்த அழைப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவின. இருப்பினும், எதிர்பார்த்தது போல் அந்த விழாவில் பெரும்பாலான சினிமா பிரபலங்கள் பங்கேற்காதது, ரசிகர்களிடையே ஒரு சிறிய வருத்தத்தை ஏற்படுத்தியது. அதே வேளையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த விழாவில் திடீரென கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தியதுடன், விழாவை சிறப்பித்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
இந்த நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த கிங்காங், " நான் அனைவருக்கும் மரியாதையோடும் அன்போடும் நேரில் சென்று அழைத்தேன். அவரவர் வேலை காரணமாக வர முடியாமல் போனது இயல்பானது. பாக்யராஜ், தேவயானி உள்ளிட்ட சிலர் மண்டபத்துக்கே வந்தும் கூட்டம் காரணமாக உள்ளே வர முடியாமல் திரும்பி சென்றதாகவும் எனக்குத் தெரியவந்தது" என கூறினார்.
இதையும் படிங்க: நிறுத்தப்பட்ட "பராசக்தி" படப்பிடிப்பு மீண்டும் துவக்கம்..! மகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்..!
இந்த சூழலில், பலர் வராத நிலையிலும், மணவிழாவிற்குப் பிறகு, தனிப்பட்ட முறையில் நடிகர் சிவகார்த்திகேயன், கிங்காங் வீட்டுக்கே சென்று மணமக்களை நேரில் சந்தித்து, வாழ்த்தி பரிசளித்ததோடு, அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டாராம். அது மட்டுமல்ல, கிங்காங் மகள் ஒரு தீவிரமான சிவகார்த்திகேயன் ரசிகை. திருமண விழாவுக்கு தனது அபிமான நடிகர் வரவில்லை என்பது இழப்பாகவே அவருக்கு இருந்தது. ஆனால், அவர் நேரில் வந்து வாழ்த்திய அந்த மனநிறைவு தருணம், அவருக்கேற்ற ஒரு வாழ்நாள் நினைவாக மாறியிருக்கிறது. இப்படி இருக்கையில், "அவர் நேரில் வந்து வாழ்த்தியது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு தருணம். அந்த அன்பு எனக்கு உண்மையிலேயே பெருமிதம் அளிக்கிறது" எனக் கிங்காங்-ன் மகள் நெகிழ்வுடன் கூறியுள்ளார்.
இப்படி இருக்க, சிவகார்த்திகேயன் தனது அன்பை வெளிப்படுத்தும் அந்த சந்திப்பு ஆகியவை அடங்கிய, வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், சிவகார்த்திகேயன், மணமக்களை நேரில் சந்தித்து நல்வாழ்த்துகள் தெரிவிப்பதும் கிங்காங் மற்றும் அவரது குடும்பம் மிகவும் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்பதும், நெகிழ்ச்சியும் கொண்டாட்டமும் கலந்த அந்த தருணம், பலரின் இதயங்களையும் தொட்டுள்ளதும் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க: 'தளபதி' இடத்தை பிடித்த 'குட்டி தளபதி'..! சினிமாவில் விஜய் பெற்ற சம்பளத்தை தன்வசப்படுத்திய நடிகர் 'SK'..!