எம்.ஆர்.ராதாவின் மனைவி, ராதிகாவின் தாயார் கீதா ராதா காலமானார்..! முதலமைச்சர் இரங்கல்..!
எம்.ஆர்.ராதா அவர்களின் மனைவியும், ராதிகாவின் தாயாருமான கீதா ராதா காலமானதை அடுத்து முதல் அமைச்சர் முக.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரைத்துறையில், 80-களில் இருந்து இன்று வரை நடிப்பின் உச்சமாக திகழும் ஒருவர் என்றால், அது நடிகை ராதிகா. ஆனால், அந்த இளமையுடனான முகத்துக்குப் பின்னால் இருந்த பலம், தைரியம், தெளிவு என அனைத்துக்கும் சூத்திரதாரியாக இருந்தவர் அவரது அம்மா கீதா ராதா. அந்த நிஜமான “இரும்பு பெண்மணியின்” மறைவு தான் இன்று தமிழ் திரை உலகை சோகத்தில் ஆழ்த்திய செய்தியாக மாறியுள்ளது. செப்டம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை இரவு 9.20 மணி.
இந்நேரம் தான் நடிகை ராதிகா தனது அன்பு தாயை இழந்த கணம். வயது முதிர்வும் உடல்நலக் குறையும் காரணமாக, 86 வயதான கீதா ராதா, தனது கடைசி மூச்சை விட்டார். இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகை ராதிகா தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார்.. அதில், “மறைந்த நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் மனைவியும், எனது தாயார் கீதா ராதா அவர்கள் 21.09.2025 ஞாயிற்றுக்கிழமை இரவு உடல் நலக் குறைவால் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார். இப்படி இருக்க மறைந்த நடிகவேள் எம்.ஆர். ராதாவுக்கு மூன்று மனைவிகள் இருந்தார்கள். அவர்களில் மூன்றாவது மனைவியாக கீதா ராதா புகழ்பெற்றவர். இலங்கையைச் சேர்ந்த இவர், தமிழ்நாட்டில் குடியேர்ந்து, எம்.ஆர்.ராதாவுடன் வாழ்ந்தார். அவர்களது திருமண வாழ்க்கையில் பிறந்தவர்கள் தான், நடிகை ராதிகா, நடிகை நிரோஷா.
இவர்கள் இருவரும் இன்று தமிழகத்தின் திரையுலகிலும், தொலைக்காட்சி உலகிலும் மிகப்பெரிய பங்குபற்றியுள்ள பெண்கள். அதற்குப் பின்னணி அம்மாவின் ஆதரவு, கனவுகளும், வாழ்க்கையை வடிவமைத்த முறையும்தான். ஒரு பேட்டியில், ராதிகா பேசுகையில், “என் அப்பா தைரியசாலி என்று சொல்வார்கள். ஆனால் என் வாழ்க்கையை கட்டமைத்தது என் அம்மாதான். நிஜமான ‘ஐரன் லேடி’ அவர். நான் இன்று இந்த இடத்தில் இருக்கிறேன் என்றால், அதற்கு முழுக் காரணம் அவர்தான்.” என்றார். கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் வீடியோக்கள், பாரம்பரிய உடைகளில் தாயுடன் எடுத்த புகைப்படங்கள், தன் குழந்தைப் பருவ ஞாபகங்களுடன் தாயை போஸ்ட் செய்த பதிவுகள் என இவையெல்லாம் ராதிகாவின் தாயைப் பற்றிய பாசத்தின் சாட்சிகள். மேலும் தந்தை எம்.ஆர். ராதா மரணம் அடைந்தபோதும், கீதா தன்னுடைய பிள்ளைகளுக்கு தந்தையாகவும், ஆசானாகவும், பாசமிகு தோழியாகவும் இருந்தார். சினிமாவில் வாய்ப்பு தேடி வரும் காலங்களில், ராதிகாவின் கால்ஷீட் முதல் சம்பளம் வரை கவனித்துக் கொண்டது கீதாதான். ஒவ்வொரு வாரமும் என்ன வேலை உள்ளது, என்ன நிகழ்ச்சி உள்ளது என்பதையெல்லாம் கணக்கிட்டு எழுதிக் கொடுப்பதும் அவர் செய்த வேலை.
இதையும் படிங்க: நடிகர் விஜய்க்கு இப்படி ஒரு அட்வைஸ் கொடுக்கனுமா..! கமல்ஹாசன் பேச்சால் அலார்ட்டில் ரசிகர்கள்..!
இது குறித்து ராதிகா, தன் பேட்டிகளில், “என் முதல் மேனேஜரும், முதல் ஆசானும் என் அம்மாதான்” எனக் கூறியிருக்கிறார். அத்துடன் கீதா ராதாவின் உடல் வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு, திரையுலக நட்சத்திரங்கள் வந்தபோது, கண்ணீரில் தத்தளித்த நடிகை ராதிகா, அவர்களைப் பார்த்தவுடன் அதிகமாக அழத் தொடங்கினார். நடிகர் பிரபு ஓடோடி வந்தார். அவரை பார்த்தவுடன் ராதிகா கதறி அழ்ந்தார். நாசரின் கையை பிடித்து நிரோஷா தவித்துக் கொண்டே அழுதார்.
இந்த காட்சிகள், இழப்பின் பரபரப்பை மட்டுமல்ல, அவர்கள் தாயின் மீது கொண்ட பாசத்தின் ஆழத்தையும் வெளிக்கொணர்ந்தது. கீதா ராதா உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்கள்: மறைந்த முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி, நடிகர் நாசர், பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா, பொன்வண்ணன், ரேவதி, ஸாரிகா, சுகாசினி மற்றும் விஜய் டிவி பிரபலங்கள், சின்னத்திரை நடிகர்கள் மற்றும் பல்வேறு இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், பிரபலங்களும் வந்தனர். இவர்களை தொடர்ந்து மாண்புமிகு மு.க. ஸ்டாலின், கீதா ராதாவின் மறைவுக்காக இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில் “நடிகவேள் எம்.ஆர். ராதா மனைவி கீதா ராதா அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பிரிவால் வாடும் சகோதரி ராதிகா சரத்குமார் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார். இந்த செய்தி, அரசியல் மற்றும் கலாசாரவாதியின் பார்வையிலும் கீதா ராதாவின் முக்கியத்துவம் எவ்வளவு என்பதை உணர்த்துகிறது.
இதையும் படிங்க: என் குழந்தை உன்னையே தேடுறான் அப்பா...நான் என்ன செய்வேன்..! கண்ணீர் வர வைக்கும் இந்திரஜா சங்கரின் பதிவு வைரல்..!