100-க்கும் மேற்பட்ட பெண்கள் சீரழிக்கப்பட்டு கொலை..! தர்மஸ்தலா கோவில் விவகாரம் குறித்து நடிகை ரம்யா காட்டம்..!
தர்மஸ்தலா கோவிலில் பெண்கள் கற்பழித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து நடிகை ரம்யா காட்டமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டத்தில் அமைந்துள்ள தர்மஸ்தலா மஞ்சுநாத சாமி கோவில், நாடு முழுவதும் பக்தர்களால் மதிக்கப்படும் ஒரு பிரசித்தி பெற்ற புனித தலம். ஆண்டுக்கு கோடிக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்யும் இந்தக் கோவிலில், தற்போது ஒரு அதிர்ச்சிகரமான புகாரின் காரணமாக உலகம் முழுவதும் உள்ளவர்களின் கவனத்தை பெற்று இருக்கிறது. இந்த கோவிலின் முன்னாள் ஊழியர் ஒருவர், கடந்த ஜூலை 4 ஆம் தேதி, பொதுமக்கள் மற்றும் ஊடகங்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில் ஒரு புகாரை அதிகாரப்பூர்வமாக அளித்துள்ளார்.
அவரது குற்றச்சாட்டுகள் மிகக் கொடூரமானதும், சிந்திக்க முடியாத வகையில் கடினமானதுமாக இருக்கின்றது. அதனபடி அவர் கூறுகையில், " 1998 முதல் 2014 ஆம் ஆண்டு வரையில், தர்மஸ்தலா கோவிலில் பணியாற்றிய காலத்தில், கோவிலுக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, கொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவங்களில் எனக்கு தெரிந்தவர்கள் சிலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அந்த உடல்களை ரகசியமாகப் புதைக்க, கோவில் நிர்வாகத்தினர் தன்னை வற்புறுத்தினார்கள்" என அவர் தனது புகாரில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், கர்நாடக மாநில போலீசார் வழக்குப் பதிவு செய்து, முன்னாள் ஊழியரை கைது செய்து, பெல்தங்காடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். இந்த நிகழ்வு ஒட்டுமொத்த கர்நாடக மாநிலத்தையே பரபரப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது. இந்த அதிர்ச்சியூட்டும் புகாரின் பின்னணியில், மாநில பெண்கள் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் நாகலட்சுமி சவுத்ரி, முதலமைச்சர் சித்தராமையா அவர்களுக்கு கடிதம் எழுதி, "இந்தச் சம்பவம் நாட்டையே அச்சுறுத்தும் வகையில் உள்ளது. இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், மங்களூரு வக்கீல்கள் சங்கத்தின் உறுப்பினர்கள், புகார்தாரரின் வக்கீலுடன் இணைந்து, பெங்களூருவில் முதல்வரை நேரில் சந்தித்து, "இந்த வழக்கை எஸ்ஐடி (SIT) விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டனர். மேலும், உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரரிடம் அதிகாரபூர்வமாக மனுவும் வழங்கப்பட்டது. இந்த விவகாரத்தில், உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கோபாலகவுடா, "இது போல ஒரு கொடூர வழக்கு மீது பொது நீதிமன்றங்களில் விசாரணை நடைபெறக்கூடாது.
இவை தனி விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற வேண்டும்" என வலியுறுத்தியிருக்கிறார். அவரது தலைமையிலான சட்ட வல்லுநர்கள் குழு, இந்த வழக்கை நேர்மையாக விசாரிக்க, விசாரணை அமைப்புக்களை சீர்படுத்தும் வகையில் அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளனர். இப்படி இருக்க, இந்த விவகாரத்தில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் மற்றும் கன்னட திரைப்பட நடிகையுமான திவ்யா ஸ்பந்தனா என்ற ரம்யா, தனது சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார். அதன்படி, "தர்மஸ்தலாவில் பெண்கள் காணாமல் போனது, மற்றும் பிணங்கள் புதைக்கப்பட்டதாக எழுந்த புகாரைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். தர்மஸ்தலா என்பது மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட, புனிதமான இடமாகக் கருதப்படுகிறது. இந்த விவகாரத்தில் நேர்மையான விசாரணை நடைபெறும் என்றும், உண்மை வெளிவரும் என்றும் நம்புகிறேன்" என பதிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: இயக்குநர் கோபி நயினார் மீது வெடித்த அதிரடி குற்றச்சாட்டு...! நிம்மதியாக வாழ விடுங்கள் என உதவி இயக்குனர் ராஜ்கமல் புகார்..!
ரம்யா, தமிழில் வெங்கடேஷ் இயக்கிய ‘குத்து’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர். பின்னர், அர்ஜுன் நடித்த ‘கிரி’, தனுஷ் நடித்த ‘பொல்லாதவன்’, சூர்யா நடித்த ‘வாரணம் ஆயிரம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். இவரது நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. பின்னர் கன்னட அரசியலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவையில் எம்.பியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சமூக பிரச்சனைகளில் தொடர்ந்து தன்னுடைய குரலை எழுப்பி வருகிறார். மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் பேசுகையில், " இந்த வழக்கு தற்போது ஆரம்ப கட்ட விசாரணையில் உள்ளது.
விசாரணையின் பின்னணி மற்றும் உண்மை நிலவரங்களைத் தெரிந்து கொண்ட பின், SIT அமைக்க வேண்டுமா என்பதை அரசாங்கம் ஆலோசிக்கும்" என தெரிவித்தார். அதாவது, தற்போது பொது விசாரணை மட்டுமே நடைபெற்று வருவதாகவும், ஆனால் விசாரணையின் அளவு மற்றும் வெளியான தகவல்களைப் பொறுத்து, விசாரணை கோணத்தை மாற்றலாம் என்றும் கூறியுள்ளார். இந்த சூழலில், தர்மஸ்தலா கோவில் மீது முன்பு எந்தவொரு குற்றச்சாட்டு எழுந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இப்போது அந்த கோவிலின் முன்னாள் ஊழியரால் எழுந்திருக்கும் இக்குற்றச்சாட்டுகள், கோவிலின் சிறப்பும், மதிப்பும் கேள்விக்குள்ளாக்கும் அளவுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கு, ஒரு எளிய புகாராகத் தொடங்கினாலும், அது எதிர்பாராதவிதமாக ஒரு பெரும் சமூக-அரசியல் விவாதத்திற்கு உரியதாய் மாறியிருக்கிறது. புகாராளரின் வாக்குமூலம், ஆதாரங்கள், மற்றும் அதிகாரிகள் மேற்கொள்ளும் விசாரணைகளின் ஆழத்தில்தான், உண்மை வெளிவரும். இந்த வழக்கில் சட்ட, சமூக, மத, அரசியல் ஆகிய அனைத்துத் துறைகளும் ஒரே நேரத்தில் மோதும் நிலை உருவாகும் முன்னரே, அரசு மற்றும் போலீசார் பொறுப்புடன் செயல்பட்டு உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பது சமூகத்தின் ஒருமித்தக் கோரிக்கையாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்..! பதறவைக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல்..!