இயக்குநர் கோபி நயினார் மீது வெடித்த அதிரடி குற்றச்சாட்டு...! நிம்மதியாக வாழ விடுங்கள் என உதவி இயக்குனர் ராஜ்கமல் புகார்..!
நிம்மதியாக வாழ விடுங்கள் இயக்குநர் கோபி நயினார் என உதவி இயக்குனர் ராஜ்கமல் கொடுத்த குற்றச்சாட்டு திரையுலகில் பூதாகாரமாகியுள்ளது.
உலகில் எந்த துறைகளை தேர்வு செய்து வேலை செய்தாலும் எளிதில் வெற்றி பெற முடியாது.. அதே போல் தான் திரைப்படத் துறையிலும் அவ்வளவு எளிதில் வெற்றியை பெற முடியாது. இப்படி இருக்க, இங்கு வருபவர்கள் தனக்கு கிடைக்கும் முதல் வாய்ப்புக்காக சில்லறை சம்பளத்துக்கு கூட தங்களது பெரிய உழைப்பை கொடுப்பர். அந்தவகையில், திரை உலகில் நாம் கண்டு கழிக்கும் பெரிய படங்களில் பின்புற உழைப்பு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மேலும், பின்புறத்தில் நிழலாக செயல்படும் உதவி இயக்குனர்களின் வாழ்க்கை பற்றிக் கேட்கும்போது, அவர்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் துன்பங்களை யாரும் வெளிப்படையாகக் கூறுவதில்லை.
ஆனால், சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு, இந்த நிலையை மாற்றும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டைச் சேர்ந்த ராஜ்கமல் என்பவர், கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். அவர், இயக்குநர் கோபி நயினார் என்பவரிடம் 2018-ம் ஆண்டு உதவி இயக்குனராக சேர்ந்ததாகவும், அப்போது இருந்த உற்சாகம் இன்று மிகுந்த ஏமாற்றமாக மாறிவிட்டதாகவும் கூறி இருக்கிறார். அதன்படி, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ராஜ்கமல், மிகுந்த துக்கத்துடன் தனது அனுபவங்களைப் பகிர்ந்தார். அதில், " படிப்பை முடித்தபின், சினிமாவை ஒரு கனவாகக் கொண்டு நான் 2018-ம் ஆண்டு இயக்குநர் கோபி நயினார் சாரிடம் உதவி இயக்குநராக சேர்ந்தேன். அவர் படம் எடுப்பதோ, எழுதுவதோ போன்ற பணிகளில் மட்டுமல்ல பணிகள் இல்லாத நேரங்களிலும் தொடர்ந்து அவருடன் இருந்தேன்.
ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் ஒரு ரூபாய்கூட எனக்கு சம்பளமாக தரவில்லை. நான் மட்டும் அல்ல, என்னுடன் பணியாற்றிய நான்கு பேருக்கும் இதே நிலை தான். சம்பளம் கேட்டால், நீங்க என் திருமணத்துக்கு ஏதாவது பெரிதாக செய்யப்போறீங்க அல்லது, அடுத்த படத்துல உங்களுக்காக ஒரு கதாபாத்திரம் வெச்சிருக்கேன் அல்லது இன்னும் சில நாட்கள் பொறுங்க என கூறிவிட்டு சென்று விடுவார். இது போல பல போலி வாக்குறுதிகளை வைத்து நாங்கள் ஏமாற்றப்பட்டோம். உதவி இயக்குநராக பணிபுரிவது என்பது வெறும் பணம் சம்பாதிக்கவே அல்ல. அந்த வாய்ப்புக்குள் தங்கள் கனவுகளை பிணைத்துக் கொண்டு உழைக்கும் இளம் படைப்பாளிகளுக்கு, எதிர்பார்ப்புகள் நிறைந்த வாழ்க்கை அது. ஆனால் அந்த எதிர்பார்ப்புகளே ஏமாற்றமாக மாறும் போது, அவர்கள் மனதில் ஏற்படும் வலி சொல்ல முடியாதது. பணம் போனால் போகட்டும், அது எனக்கு தேவையில்லை. நிம்மதியாக வாழ விடுங்கள் என்று சொன்னால் கூட, உன்னை நிம்மதியாக வாழ விட மாட்டேன் என்கிற அளவுக்கு செயல் படுகிறார். இது என்னவென்றால் ஒரு பணியாளராக மட்டும் இல்லை, ஒரு மனிதனாக என்னை மறுக்கும் நிலையில் அவருடைய அணுகுமுறை இருக்கிறது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்..! பதறவைக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல்..!
இந்த குற்றச்சாட்டுகள் வெறுமனே ஒரு சம்பள பிரச்சினை அல்ல. அது தொழில்முறை ஒழுங்குமுறை குறித்த, மனிதநேயத்தின் அடிப்படையை குறிப்பதாக உள்ளது. இப்படி இருக்க, இயக்குநர் கோபி நயினார், ‘அரம்மன்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானவர். அந்தப் படம் வெளியான போது, சமூக நீதியை பேசிய இயக்குநராக பாராட்டப்பட்டவர். ஆனால், தற்போது அவர் மீது உதவி இயக்குநர் ஒருவர் இப்படி வெளிப்படையாக குற்றச்சாட்டுகளை முன்வைப்பது, எதிர்பாராத திருப்பமாக அமைந்துள்ளது. இந்த விவகாரம் வெளியாகியதிலிருந்து, திரையுலகத்தில் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிலர், "இது போல இளைஞர்களை சுரண்டுவது திரையுலகத்தில் ஒன்றும் புதிதல்ல" என்கின்றனர். மற்றொருபக்கம், "இது போன்ற விஷயங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவது தான் மாற்றத்தின் தொடக்கம்" என்றும் சமூக ஊடகங்களில் கருத்துகள் பதிவாகி வருகின்றன. இது தொடர்பாக இயக்குநர் கோபி நயினார் இதுவரை எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை. ஆனால், இந்த விவகாரம் விரைவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. தொழில்முறை துறைகளில், பணிக்காக நம்பிக்கை வைத்து சேர்ந்தவர்களின் இத்தகைய ஏமாற்றத்தை குற்றமாகவே பார்க்கவேண்டும். இதைப் போன்ற சம்பவங்களில், உதவி இயக்குனர்கள், டெக்னீஷியன்கள், ஒளிப்பதிவாளர்கள், கலைதுறை ஊழியர்கள் என பலர், தொழில் நம்பிக்கையை இழக்கும் அளவுக்கு பாதிக்கப்படுகின்றனர். அந்த நிலைமை திரையுலகின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கும் அளவுக்கு இருக்கிறது.
ஆகவே, இப்போது ராஜ்கமல் பேசியது ஒரு தொடக்கம் மட்டுமே. இது போல ஏமாற்றப்பட்ட பல இளம் படைப்பாளிகள், தான் சந்தித்த வலிகளை வெளிப்படையாக பகிரத் தொடங்கினால், திரையுலகத்தில் மறைந்திருக்கும் ஆட்சி முறைகள் வெளிக்கொண்டு வரலாம். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க, தொழில்முறை ஒழுங்குகள், ஊழியர் பாதுகாப்பு சட்டங்கள், மற்றும் தெளிவான ஒப்பந்தங்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். சினிமா என்பது ஒரு கலை, ஆனால் அந்தக் கலையின் பின்னணியில் பலர் உழைக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
இதையும் படிங்க: அனிருத் இசை நிகழ்ச்சி திடீர் மாற்றம்...! புதிய தேதி மற்றும் இடம் விரைவில் அறிவிப்பு..!