×
 

ஹோட்டல் ரூமில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட மலையாள திரைப்பட நடிகர் கலாபவன் நவாஸ்..!

மலையாள திரைப்பட நடிகர் கலாபவன் நவாஸ் மரண செய்தி திரையுலகத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

1995 ஆம் ஆண்டு, “சைதன்யம்” என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படங்களில் அறிமுகமான கலாபவன் நவாஸ், பின்னர் தனது நகைச்சுவை நடிப்புத்திறன் மற்றும் மிமிக்ரி காரணமாக சிறந்த புகழைப் பெற்றவர். மிமிக்ஸ் ஆக்ஷன் 500, ஹிட்லர் பிரதர்ஸ், ஜூனியர் மாண்ட்ரேக், தில்லானா தில்லானா போன்ற திரைப்படங்களிலும், பல தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார். திரைப்படங்களிலும், மேடை நிகழ்ச்சிகளிலும் நிதானமான நகைச்சுவையுடன் கலந்த நடிப்பால், ரசிகர்களிடம் தனி இடத்தைப் பிடித்திருந்தார். அவரது நடிப்பு தன்மை, இயல்பான நகைச்சுவை மற்றும் சமூக கருத்துக்களுடன் கூடிய மேடை உரைகள், பல ரசிகர்களிடையே அவரை மதிக்க வைக்கும் விதமாக இருந்தது.

சிறிய கதாபாத்திரங்களிலிருந்தும், மேடை நிகழ்ச்சிகளில் நடிப்பதிலிருந்தும் தொடங்கி, நவாஸ் தனது தனித்துவமான திறமையால்  அனைவரையும் கட்டியெழுப்பியிருந்தார். இப்படிப்பட்ட மலையாள திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகரும், மிமிக்ரி கலைஞரும், பின்னணிப் பாடகருமான கலாபவன் நவாஸ் மரணம் அடைந்தார் என்ற செய்தி திரையுலகத்தையே உலுக்கியுள்ளது. 51 வயதாகும் நவாஸ், கடந்த சில நாட்களாக புதிய திரைப்படமான 'பிரகம்பனம்' படத்தின் படப்பிடிப்புக்காக கொச்சி அருகே உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தங்கி இருந்தார். நேற்று மாலை அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் பேச்சு மூச்சு இன்றி கிடப்பதைக் கண்ட படக்குழுவினர், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்களை அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.  குறிப்பாக நேற்று மாலை, 'பிரகம்பனம்' படக்குழுவினர் வெளியேறும் திட்டத்தில் இருந்தனர்.

அந்த நேரத்தில், நவாஸ் தனது ஹோட்டல் அறையிலிருந்து நீண்ட நேரமாக வெளியே வராததை கவனித்த படக்குழுவினர், அவரை தொடர்பு கொள்ள முயன்றனர். பலமுறை அழைத்தும் பதில் இல்லாததால், சந்தேகத்தில் ஹோட்டல் ஊழியர்களின் உதவியுடன் அறையை திறந்தபோது, அவர் படுத்துக்கொண்ட நிலையில் பேசாமல் காணப்பட்டார். உடனடியாக அருகில் இருந்த கச்சேரிப்படம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவர்கள் நவாஸ் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். மாரடைப்பே அவருடைய மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என மருத்துவ தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது, இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மரணம் பற்றிய விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அவரின் உடலுக்கு இன்று அதிகாரபூர்வ பிரேத பரிசோதனை நடத்தப்பட உள்ளது. நவாஸின் மரணம் மலையாள திரையுலகத்தையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மரணச் செய்தி வெளியாகியதும், பல திரையுலக பிரபலங்கள், மேடை கலைஞர்கள், ரசிகர்கள் மற்றும் நெருக்கமான நண்பர்கள் என அனைவரும் சமூக ஊடகங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பயத்துல ஏதாவது ஆச்சுன்னா கம்பெனி பொறுப்பல்ல..! பீதியை கிளப்பும் 'தி கான்ஜுரிங்: லாஸ்ட் ரைட்ஸ்' ட்ரெய்லர்..!

பிரபல நடிகரும், நவாஸுடன் பல மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள நடிகர் ஹரிஶ்ரீ அஸோக், அவரது சமூக ஊடகப் பதிவில், "ஒரு நேர்மையான கலைஞனையும், நண்பனையும் இழந்தோம். நவாஸ் இப்போது நம்முடன் இல்லை என்பது நம்பவே முடியவில்லை" என தெரிவித்தார். அத்துடன், நடிகை பிந்து பனிக்கர், நவாஸ் குடும்பத்திற்கான ஆழ்ந்த இரங்கலையும், அவரது மரணம் மலையாள கலாச்சாரத்துக்கு ஒரு இழப்பு எனவும் குறிப்பிட்டார். தென்னிந்திய சினிமா குறிப்பாக மலையாள திரையுலகில், மிமிக்ரி கலைஞர்களுக்கு தனியொரு இடம் உண்டு. கலாபவன் நவாஸ், அந்த இடத்தைப் பெற்றதற்காக மட்டுமல்ல, அந்தத் துறைக்கு மரியாதை ஏற்படுத்தியதற்காகவும் நினைவில் வைக்கப்படுவார். அவர் பயன்படுத்திய நகைச்சுவை, ஒலி காட்சிகள், மற்றும் மிமிக்ரி போன்றவை மேடை நிகழ்ச்சிகளில் அவரை பிரபலமாக்கின. பல இளம் மிமிக்ரி கலைஞர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டியவர் என்பதையும், கலைவிழாக்களில் தொடர்ந்து பங்கேற்றவராகவும் அவர் நினைவில் இருப்பார்.

இப்படி 51 வயதிலேயே, தனது முழு திறமையை வெளிக் கொண்டு வந்த இந்த வேளையில், கலாபவன் நவாஸ் மரணம் வருத்தத்தைக் ஏற்படுத்தும் ஒன்றாக உள்ளது. அவரது உயிரிழப்பு ஒரு மிகுந்த திறமைமிக்க கலைஞனின் திடீர் முடிவைக் குறிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் நெருங்கிய உறவினர்களுக்கும் மக்கள் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தெலுங்கு நடிகை கல்பிகா மனநலம் பாதிக்கப்பட்டவர்..! குடும்ப பாதுகாப்புக்காக தந்தையே போலீசில் புகார்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share