"எந்திரன்" திரைப்படத்தின் கதை உரிமை விவகாரம்..! ஐகோர்ட்டில் பரிசீலனை செய்யப்பட்ட இயக்குனர் சங்கரின் வழக்குகள் ..!
எந்திரன் திரைப்படத்தின் கதை உரிமை விவகாரம் குறித்து இயக்குனர் சங்கரின் வழக்குகள் ஐகோர்ட்டில் பரிசீலனை செய்யப்பட்டது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படங்களில் மாஸ் ஹிட் கொடுத்த படங்களின் வரிசையில் முக்கியமான படமாக பார்க்கப்படுவது "எந்திரன்" திரைப்படம் தான். இந்த படத்தின் கதை உரிமை சிக்கல் மீண்டும் நீதிமன்றத்திற்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் ஷங்கருக்கு எதிராக எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கொன்றும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேலும் இரண்டு வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளின் பின்னணி என்னவென்றால், "எந்திரன்" திரைப்படத்தின் கதை தன்னுடையது என தமிழ்நாடன் என்ற நபர், இயக்குநர் ஷங்கர் மீது குற்றச்சாட்டை முன்வைத்து, எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததோடு, சென்னை உயர் நீதிமன்றத்திலும் தனியாக ஒரு வழக்கை தொடர்ந்திருந்தார். அவரது மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த வழக்கை தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடன் மீண்டும் மேல் முறையீடு செய்த நிலையில், அந்த வழக்கு தற்போதும் டிவிசன் பெஞ்சில் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில், சென்னை ஐகோர்ட்டில் தனி நீதிபதி தள்ளுபடி செய்ததை அடிப்படையாகக் கொண்டு, எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்ய இயக்குநர் ஷங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை எடுத்துக் கொண்ட நீதிமன்றம், எழும்பூர் வழக்கின் விசாரணையை இடைக்காலமாக நிறுத்தி, தற்காலிக தடை உத்தரவு பிறப்பித்தது.
மேலும், இயக்குநர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அவர் மேல்முறையீடு செய்துள்ள மனுவும், இந்த வழக்கு விவகாரத்துடன் தொடர்புடையது எனக் கூறப்படுகிறது. இந்த வழக்கு கடந்த வாரம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம். எஸ். ரமேஷ் மற்றும் வி. லட்சுமி நாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது, "எந்திரன்" திரைப்படக் கதை உரிமையை மையமாகக் கொண்ட 3 வழக்குகளும் ஒரே பிரச்சனையை ஒட்டியவை என்பதால், அவற்றை ஒரே டிவிசன் பெஞ்ச் விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் பரிந்துரை செய்தனர்.
இதையும் படிங்க: "வீரயுக நாயகன் வேள்பாரி" நாவல் படமாக்கப்படும் – இயக்குநர் சங்கர் உறுதி..!
இதற்கான அதிகாரப்பூர்வ அனுமதியை பெற, வழக்குகளை உயர்நீதிமன்ற பதிவுத்துறை பதிவாளரிடம் அனுப்பி வைக்கப்படுமெனவும், அதன்பின்னர் அந்த வழக்குகள் ஒருங்கிணைக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்குகளில் தொடர்ந்து இழுபறி தொடரும் நிலையில், படைப்பின்மை குற்றச்சாட்டு, கதை உரிமை, குற்றவியல் மற்றும் குடிமைப் பிரிவுகளின் சட்டவிதிகளின் அடிப்படையில் தீர்வுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக கருதப்படும் ஷங்கருக்கு இது ஒரு முக்கியமான சட்டப் போராட்டமாக உருவெடுத்துள்ளது. இதற்கிடையில், “எந்திரன்” திரைப்படம் 2010-ம் ஆண்டு வெளியான பிறகும், அதனைச் சேர்ந்த உரிமை தொடர்பான பிரச்சனைகள் இன்னும் முடிவுக்கு வராதது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடவடிக்கைகள் அனைத்தும் சட்ட நடைமுறைகளை பின்பற்றி நடைபெறுவதாகவும், தீர்ப்பு வரும் வரை வழக்கின் முழுமையான உண்மை நிலை தெளிவடையாது என்பதும் தெளிவாக தெரிகிறது.
இதையும் படிங்க: கருப்பு நிற உடையில் கண்கவரும் அழகில் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி..! புகைப்படங்கள் இணையத்தில் வைரல்..!