திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்..! திரை பிரபலங்கள் அஞ்சலி..!
பிரபல திரைப்பட இயக்குநரான வேலு பிரபாகரன் இன்று பிற்பகல் காலமானார்.
தமிழ் திரைப்பட இயக்குநர், ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகராக விளங்கிய வேலு பிரபாகரன் உடல்நலக்குறைவால் இன்று பிற்பகல் 12.20 மணியளவில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். திரையுலகில் தனித்துவமான சிந்தனைகளுடன் சமூக பார்வையையும் விமர்சனங்களையும் வெளிப்படுத்தும் இயக்குநராக அறியப்பட்ட வேலு பிரபாகரன், தனது பயணத்தை சினிமாவில் ஒளிப்பதிவாளராக தொடங்கினார்.
பின்னர் 1989-ம் ஆண்டு வெளிவந்த ‘நாளைய மனிதன்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், அதன் பின்னர் தமிழ் சினிமாவில் பல முக்கிய படங்களை இயக்கினார். அதன்படி, அசுரன், ராஜாளி, கடவுள், சிவன், புரட்சிக்காரன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்த படங்கள், திரைக்கதையின் மரபுகளை மீறி வித்தியாசமான அணுகுமுறையுடன் உருவாக்கப்பட்டவை. சமூக, மத, மனித உரிமை, வரலாறு, ஆளுமை போன்ற தீவிரமான கருப்பொருட்கள் அடிப்படையில் அவர் தனது படங்களை உருவாக்கினார்.
அவரது படங்கள் சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்களை ஏற்படுத்தினாலும், சினிமா உலகில் அவரது தைரியம் தனி இடத்தைப் பிடித்தது. வேலு பிரபாகரன் இயக்குனராக மட்டுமல்லாமல், சில படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார். தனது படங்களில் அவர் எடுத்து வைத்த காட்சிகள், வசனங்கள் மற்றும் சிந்தனைகள் தமிழ் சினிமா வரலாற்றில் அழியாத கண்ணோட்டங்களை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: நடிகர் நிவின் பாலி மீது பதிந்த ரூ.1.90 கோடி மோசடி வழக்கு..! 'மஹாவீர்யார்' பட தயாரிப்பாளரின் புகாரால் புதிய சிக்கல்..!
அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் சமூக ஊடகங்கள் மூலமாகவும் நேரடியாகவும் சென்று ஆழ்ந்த இரங்கலை அஞ்சலியாக தெரிவித்துள்ளனர். அவரது மறைவு தமிழ் சினிமாவுக்கு பெரும் இழப்பாக கருதப்படுகிறது. திரையுலகில் அவருடன் பணியாற்றிய இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், நடிகர்கள் மற்றும் பல தொழில்நுட்ப நிபுணர்கள் அவரது வாழ்க்கையை குறித்து பேசி வருகின்றனர். அவரது உடல் இன்று மாலை அவரது சொந்த ஊரான சென்னையிலுள்ள தாம்பரத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
பின்னர் இன்று இரவு அல்லது நாளை காலை அவரது இறுதி சடங்குகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நடிகர் கவின் - பிரியங்கா மோகன் கூட்டணியில் புதிய படம்..! படப்பூஜையில் நடந்த சுவாரஸ்யம்..!