×
 

இசைஞானி பாடலை தொட்டாலே ஷாக் தான்.. ரிலீசான இன்றே வந்த சிக்கல்.. தலையை பிய்த்து கொள்ளும் வனிதா..!

வனிதா விஜயகுமார் இயக்கி, நடித்துள்ள ‛மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தில் தனது அனுமதியின்றி ‛சிவராத்திரி...' பாடலை பயன்படுத்தியாக இசையமைப்பாளர் இளையராஜா சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அப்போதெல்லாம் ஒரு படம் ஹிட் ஆகவேண்டும் என்றால் அதில் இளையராஜா இசையை வாசித்து இருக்க வேண்டும் என்பார்கள். அந்த அளவிற்கு அன்று முதல் இன்று வரை இளையராஜாவுக்கு மக்கள் மத்தியில் மவுசு குறையவே இல்லை. அந்த வகையில் அன்றும் இன்றும் என்றும் இசையமைப்பாளர் என்றால் அது இளையராஜா தான். அப்படிப்பட்டவர் "அன்னக்கிளி" என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976ம் ஆண்டு தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர். 

இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 1000த்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து உள்ளார். அதேசமயம், இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான "பத்ம விபூஷண்" விருது 2018ல் இவருக்கு வழங்கப்பட்டது. இத்தனை பெருமைகளுக்கும், பாடல்களுக்கும் சொந்த காரனான இவரது பாடல்களை கேட்க முடியும் ஆனால் உபயோகிக்க முடியாது. அப்படி செய்தால் உடனே காப்பி ரைட்ஸ் போடுவார். 

உதாரணத்திற்கு கடந்த 2017-ம் ஆண்டில் உலக சுற்றுப்பயணத்தின் போது அனுமதியின்றி, தனது இசையில் வந்த பாடல்களைப் பாடியதற்காக, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மீது வழக்குத் தொடர்ந்தார். அதன்பின், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் "கூலி" திரைப்படத்தின் அறிவிப்பு டீஸரில் 1983-ம் ஆண்டு "தங்க மகன்” திரைப்படத்தில் இருந்து "வா வா பக்கம் வா" என்ற தனது பாடலை அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாக இளையராஜா புகார் கூறினார். 

இதையும் படிங்க: விஜய் மாதிரி வருவார் சூர்யா சேதுபதி.. ட்ரோல் கிங்குக்கு வனிதா வக்காலத்து..!

இப்படி அவரது பாடலை தொட்டாலே கரண்டாக வெடிக்கும் இளையராஜா, மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் 'கண்மணி அன்போடு காதலன்' பாடலை பயன்படுத்தியதற்காக வழக்கு தொடர்ந்து நஷ்டஈடு கேட்டார். அதுமட்டுமில்லாமல் குட் பேட் அக்லி படத்தில் பயன்படுத்தப்பட்ட 'ஒத்த ரூபாய் தாரேன்' பாட்டிற்கு ஒத்த ரூபாய் வேண்டாம் ரூ.5 கோடி போதும் என இளையராஜா, இந்த பாடலை பயன்படுத்தியதற்காக இழப்பீடு கேட்டு இருந்தார்.

பல படங்களில் இளையராஜாவின் பழைய பாடல்களை இயக்குநர்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருவதும் ஒவ்வொரு படத்துக்கு எதிராகவும் நோட்டீஸ் அனுப்புவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது சிக்கியிருக்கிறது இன்று வெளியான 'மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர்' திரைப்படம். 

நடிகை வனிதா விஜயகுமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்திற்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா வழக்குத் தொடர்ந்துள்ளார். அதாவது, 'மைக்கேல் மதன காமராஜன்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ராத்திரி சிவராத்திரி' பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளனர். ராத்திரி சிவராத்திரி பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என இளையராஜா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இல்லையேல் நஷ்டஈடு கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரிக்கப்படும் என்று நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு தெரிவித்துள்ளது.

இதனிடையே இந்த படத்தில் இந்த பாடலை பயன்படுத்தியதற்காக படக்குழுவினர் இளையராஜாவிற்கு நன்றி கார்டு போட்டுள்ளனர். மேலும் பாடலை அனுமதி பெற்று பயன்படுத்தியதாக வனிதா தரப்பில் தெரிவிக்கின்றனர்.

 

இதையும் படிங்க: விஜய் மாதிரி வருவார் சூர்யா சேதுபதி.. ட்ரோல் கிங்குக்கு வனிதா வக்காலத்து..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share