×
 

இசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு!! பாடகி எஸ். ஜானகி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

இணையற்ற கருணையுடனும் பன்முகத்தன்மையுடனும் ஒவ்வொரு உணர்வையும் அவர் தனது குரல்வளம் மூலம் வெளிப்படுத்தினார். அவரது இனிமையான பாடல்கள் வரும் காலங்களிலும் கேட்போரை மயக்க வைக்கும்.

பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக அவரது மறைவை குறிப்பிட்டுள்ள பிரதமர், பல தலைமுறைகளாக ரசிகர்களின் மனதில் வாழும் அவரது குரல் என்றும் அழியாது என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

88 வயதான எஸ். ஜானகி, வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்களின் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், இதயம் செயலிழந்ததால் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்த செய்தி வெளியாகியதையடுத்து இந்திய திரையுலகமும், இசை ரசிகர்களும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள எஸ். ஜானகி, தனது தனித்துவமான குரலாலும், உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல் பாணியாலும் இந்திய இசை வரலாற்றில் அழியாத இடத்தைப் பிடித்தவர். நான்கு முறை தேசிய விருது பெற்ற அவர், பல தலைமுறைகளின் மனதில் நிலைத்திருக்கும் எண்ணற்ற பாடல்களை வழங்கியுள்ளார்.

இதையும் படிங்க: இசை உலகின் பேரிழப்பு.. அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம்! கண்ணீரில் பாடகி எஸ். ஜானகி ரசிகர்கள்!

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பதிவில், “புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி அம்மாவின் மறைவு இசையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. பல்வேறு மொழிகளில் அவர் பாடிய பாடல்கள் பல தலைமுறைகளாக மக்களின் பேராதரவை பெற்றுள்ளன.

இணையற்ற கருணையுடனும் பன்முகத்தன்மையுடனும் ஒவ்வொரு உணர்வையும் தனது குரலால் வெளிப்படுத்தியவர். அவரது இனிமையான பாடல்கள் வரும் காலங்களிலும் ரசிகர்களின் மனதை மயக்கிக் கொண்டே இருக்கும். இந்த துயரமான தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும், எண்ணற்ற ரசிகர்களுக்கும், ஒட்டுமொத்த இசை உலகிற்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரின் இந்த இரங்கல் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இசை ரசிகர்கள், திரையுலகினர் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்களும் எஸ். ஜானகிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: இசை உலகின் பேரிழப்பு.. அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம்! கண்ணீரில் பாடகி எஸ். ஜானகி ரசிகர்கள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share