இயக்குநர் பா.ரஞ்சித்தின் படப்பிடிப்பில் நேர்ந்த சோகம்.. ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழப்பு..!
படப்பிடிப்பின்போது மாரடைப்பு ஏற்பட்டு ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சியான் விக்ரம் நடிப்பில், இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி வெளியான ஒரு பீரியட் ஆக்ஷன் திரைப்படம் தான் தங்கலான். கோலார் தங்க வயல்களை (KGF) மையமாகக் கொண்டு, 19-ம் நூற்றாண்டின் பின்னணியில் அமைந்த இந்தப் படம், பழங்குடி மக்களின் வாழ்க்கை மற்றும் தங்க வளங்களைச் சுற்றிய மோதல்களைப் பேசுகிறது.
விக்ரம் இப்படத்தில் ஆரன், முனி, காடையன் உள்ளிட்ட ஐந்து வேடங்களில் நடித்து, தனது நடிப்பாற்றலை மீண்டும் நிரூபித்துள்ளார். படத்திற்காக அவர் தினமும் 4 மணி நேரம் தோற்றத்திற்காக உழைத்ததாகவும், அவரது அர்ப்பணிப்பு படத்தின் முக்கிய அம்சமாக பாராட்டப்பட்டதாகவும் இயக்குநர் பா. ரஞ்சித் கூறியிருந்தார். மேலும் இந்த படத்தில் விக்ரமின் தோற்றம், குறிப்பாக காட்டுவாசி போன்ற அமைப்பு, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து, தற்போது 'வேட்டுவம்' என்ற படத்தை இயக்கி வருகிறார் பா.ரஞ்சித். இதனை நீலம் புரொடக்சன் தயாரிக்க, ஆர்யா, தினேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தின் பல இடங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: 'சனியன் சகடை' புகழ் கோட்டா ஸ்ரீனிவாசன் இன்று காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!
அந்த வகையில் கடந்த 10ம் தேதி முதல் நாகை மாவட்டம் கீழையூர் அருகே விழுந்தமாவடி கிராமத்தில் அமைந்துள்ள அளப்பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் பூங்கண்டம், செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் இன்று சண்டைக் காட்சி ஒன்று படமாக்கப்பட்டபோது, காரிலிருந்து குதித்த மோகன்ராஜ் தவறி கீழே விழுந்துள்ளார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அங்கிருந்த சக கலைஞர்கள் உடனடியாக அவரை மீட்டு, நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மோகன்ராஜ் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த மோகன்ராஜ் ஸ்டண்ட் யூனியனின் முக்கிய நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.
படப்பிடிப்பின்போது மாரடைப்பு ஏற்பட்டு ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழந்த சம்பவம் திரைக் கலைஞர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நடிகர் விஷால் ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இயக்குநர் ரஞ்சித்தின் படப்பிடிப்பில், கார் கவிழ்ந்து விழும் காட்சியில் ஸ்டண்ட் கலைஞர் ராஜு காலமானார் என்பதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. ராஜுவை பல வருடங்களாக எனக்கு தெரியும். அவர் என் படங்களில் பல ஆபத்தான ஸ்டண்ட் காட்சிகளை மீண்டும் மீண்டும் செய்து காட்டுவார்.
ஏன் என்றால், அவர் மிகவும் துணிச்சலான மனிதர். அவரது மறைவு என்னை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது, எனது ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்துக்கொள்கிறேன். கடவுள் அவரது குடும்பத்தினருக்கு மன தைரியத்தை தரட்டும். இது ட்வீட் மட்டுமல்ல, அவரது குடும்பத்தின் எதிர்காலத்திற்கும், திரைப்படத் துறையில் பல ஆண்டுகளாக அவர் கடுமையாக உழைத்து இருக்கிறார். என் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மினுமினுக்கு உடையில் அழகிய தோற்றத்தில் நடிகை சான்வி மேக்னா..! அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல்..!