தமிழ் இலக்கிய உலகின் ஆளுமை... எழுத்தாளர் பூமணி காலமானார்... ‘அசுரன்’ பட கதாசிரியர் இவர் தான்...!
இவரது வெக்கை நாவலைத் தழுவியே அசுரன் படம் உருவாக்கப்பட்டு, பட்டி தொட்டி எல்லாம் மாபெரும் வெற்றி பெற்றது.
சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த தமிழ் எழுத்தாளரும், கரிசல் இலக்கியத்தின் முக்கிய ஆளுமையுமான பூமணி காலமானார். அவருக்கு வயது 79
பூலித்துரை மாணிக்கவாசகம் எனும் இயற்பெயர் கொண்ட பூமணி தமிழ் இலக்கிய வட்டாரத்தில் மிக முக்கியமான எழுத்தாளராக கொண்டாடப்பட்டவர். இவர் எழுதிய 'அஞ்ஞாடி' புதினத்துக்கு 2014-ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகருக்கு மேற்கே உள்ள ஆண்டிபட்டி எனும் ஊரில் பிறந்தார் பூமணி. இவரின் தந்தை பூலித்துரை, தாய் தேனம்மை. பூமணி இவர், தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளாராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
கரிசல் வட்டாரத்து வாழ்க்கையின் நுட்பங்களைத் தனது எழுத்தில் வெளிப்படுத்திய எழுத்தாளர். இவருடைய கல்லூரிக் காலத்தில் இவருக்கு விமர்சகர் சி. கனகசபாபதி ஆசிரியராக இருந்தார். எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பூமணியை சிறுகதைகள் எழுத ஊக்குவித்தார். 1971இல் பூமணியின் முதல் சிறுகதை ‘அறுப்பு’ தாமரை இதழில் வெளிவந்தது. அதன் பிறகு தாமரை ஆசிரியராக இருந்த தி. க. சிவசங்கரன் பூமணியை ஊக்குவித்தார்.
இதையும் படிங்க: இசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு!! பாடகி எஸ். ஜானகி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!
வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள், நல்லநாள் போன்ற சிறுகதை தொகுப்புகளை எழுதியுள்ளார். வெக்கை, நைவேத்தியம், வரப்புகள், வாய்க்கால், பிறகு, அஞ்ஞாடி, கொம்மை போன்ற நாவல்களை எழுதியுள்ளார். கருவேலம்பூக்கள், அசுரன் போன்ற படங்களுக்கு கதை எழுதியுள்ளார். இவரது வெக்கை நாவலைத் தழுவியே அசுரன் படம் உருவாக்கப்பட்டு, பட்டி தொட்டி எல்லாம் மாபெரும் வெற்றி பெற்றது.
பூமணியின் மறைவுக்கு எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ் இலக்கியத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் மறக்க முடியாததாக இருக்கும் என பலரும் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இசை உலகின் பேரிழப்பு.. அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம்! கண்ணீரில் பாடகி எஸ். ஜானகி ரசிகர்கள்!