நாளை பிறக்கும் புரட்டாசி மாத சிறப்பு: பெருமாள் அருளும், ஒருநாள் கோயில் சுற்றுலாவும்!!
புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பற்களில் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது.
புரட்டாசி மாதம் என்றாலே வைணவ பக்தர்களின் மனதில் முதலில் தோன்றுவது திருமால் வழிபாடும், சனிக்கிழமை விரதமும்தான். தமிழ் நாட்காட்டியின் ஆறாவது மாதமான இக்காலத்தில் மகாவிஷ்ணுவை மனதார வணங்கினால் அனைத்து விதமான துன்பங்களும் நீங்கி, செல்வமும் ஆரோக்கியமும் பெருகும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை.
குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகள் மிகுந்த விசேஷம் வாய்ந்தவை. அக்னி புராணம் புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பற்களில் ஒன்றாகக் குறிப்பிடுகிறது. எனவே எமபயம் நீங்கவும், வாழ்க்கைத் துன்பங்கள் விலகவும் இந்த மாதத்தில் காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவை வழிபடுவது அவசியம். சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் இக்காலத்தில், கன்னி ராசியின் அதிபதியான புதன் (மகாவிஷ்ணுவின் அம்சம்) ஆட்சி செய்கிறார்.
புதனுக்கு நட்பு கிரகமாக சனிபகவான் இருப்பதால், புரட்டாசி சனிக்கிழமைகள் இன்னும் சிறப்பு பெறுகின்றன. இந்நாட்களில் விரதம் இருந்து, துளசி மாலை சாத்தி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்தால் பாவங்கள் விலகி புண்ணியம் பெருகும். ஜாதகத்தில் ராகு-கேதுவால் ஏற்படும் காலசர்ப்ப தோஷம், நாக தோஷம், மாங்கல்ய தோஷம் போன்றவை புரட்டாசி மாத கருட வழிபாட்டால் நீங்கும் என ஆன்மிகவாதிகள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (17-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி விவகாரத்தில் புதிய யோசனைகள் உதவும்..!!
சனி அல்லது புதன் திசை நடப்பவர்கள் இம்மாதத்தில் சிறப்பு பூஜை செய்தால் தடைகள் அகலும். அதேநேரம் சிவபெருமான், விநாயகர், அம்மன் வழிபாடுகளும் இம்மாதத்தில் சிறப்பான பலன் தரும். மகாளய அமாவாசையில் மூதாதையர்களுக்கு திதி கொடுப்பது மிக முக்கியம். பலர் அசைவ உணவைத் தவிர்த்து சைவ விரதம் கடைப்பிடிப்பதும் வழக்கம்.
வீட்டிலேயே பெருமாள் படத்திற்கு துளசி மாலை, சர்க்கரை பொங்கல், சுண்டல் படைத்து வழிபடலாம். இத்தகைய புனித காலத்தை ஒட்டி, பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் எளிதில் பல திவ்ய தேசங்களை தரிசிக்கும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (டிடிடிசி) சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. “பெருமாள் கோவில்கள் சுற்றுலா – ஒரு நாள் சுற்றுலா” திட்டம் நாளை முதல் தொடங்குகிறது.
சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க வைணவ திருக்கோயில்களை ஒரே நாளில் தரிசிக்கும் வாய்ப்பு இது. சென்னையில் இரு சுற்றுலாப் பாதைகள் உள்ளன. முதல் பாதையில் திருவல்லிக்கேணி வாலாஜா சாலை தலைமை அலுவலகத்திலிருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி, திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள், மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள், சிங்கபெருமாள் கோயில், பாடலாத்ரி நரசிம்மர், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் உள்ளிட்ட ஆறு கோயில்களில் தரிசனம்.
இரண்டாவது பாதையில் திருவல்லிக்கேணி, திருநீர்மலை, திருமழிசை ஜெகநாதர், திருவள்ளூர் வைத்திய வீரராகவர், ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவர், பூந்தமல்லி வரதராஜர் உள்ளிட்ட ஏழு கோயில்கள். இரு பாதைகளிலும் கட்டணம் ஒருவருக்கு ரூ.1,000. மதிய உணவு, பிரசாதம், சிறப்பு தரிசன ஏற்பாடுகளும் உள்ளன. மதுரை, திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளிலும் அழகர் கோயில், ஸ்ரீரங்கம், சாரங்கபாணி உள்ளிட்ட முக்கிய வைணவ தலங்களுக்கு இதேபோல் சுற்றுலாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பக்தர்கள் www.ttdconline.com இணையதளம் வழியாக முன்பதிவு செய்துகொள்ளலாம். புரட்டாசி மாதத்தின் இந்த சிறப்பான வாய்ப்பைப் பயன்படுத்தி பெருமாளின் அருளைப் பெற்று, ஆன்மிக அனுபவத்துடன் வளமான வாழ்வை நோக்கி செல்லுமாறு பக்தர்கள் அழைக்கப்படுகிறார்கள்.
இதையும் படிங்க: கும்பாபிஷேகத்திற்கு ரெடியாகும் மதுரை.. லேசர் விளக்குகளால் ஜொலிக்கும் மீனாட்சி அம்மன் கோபுரங்கள்!!