இன்று மாலை மகரஜோதி! மலைமேல் குவியும் பக்தர்கள்.. சபரிமலையில் கடும் கட்டுப்பாடுகள்!
சபரிமலையில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் மகரஜோதி தரிசனத்தில் ஐயப்பனைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு காலத்தின் உச்சகட்ட நிகழ்வான ‘மகரஜோதி தரிசனம்’ இன்று (ஜனவரி 14) மாலை நடைபெறவுள்ளது. பொன்னம்பலமேட்டில் சுவாமி அய்யப்பன் ஜோதி வடிவில் மூன்று முறை பக்தர்களுக்குக் காட்சி தரும் அரிய நிகழ்வைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் மலைகளில் முகாமிட்டுள்ளனர்.
மகர சங்கிரம பூஜையை முன்னிட்டுத் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் கடந்த இரண்டு நாட்களாகச் சுத்திகிரியை பூஜைகள் நடைபெற்று வந்தன. இன்று மதியம் 3.08 மணிக்கு மகர சங்கிரம விசேஷ பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெறவுள்ளன. பந்தள அரண்மனையில் இருந்து ஊர்வலமாகக் கொண்டு வரப்படும் திருவாபரணப் பெட்டி, இன்று மாலை 6.15 மணி அளவில் சன்னிதானத்தை வந்தடையும். அதனைத் தொடர்ந்து சுவாமி அய்யப்பனுக்குத் திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு, மாலை 6.40 மணிக்கு மகா தீபாராதனை காட்டப்படும்.
தீபாராதனை முடிந்த சில நொடிகளிலேயே, பொன்னம்பலமேட்டில் அய்யப்பன் ஜோதி வடிவில் மூன்று முறை காட்சி அளிப்பார். இந்த மகா ஜோதி தரிசனத்தைக் காண்பதற்காகப் புல்மேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 4 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கூடாரம் அமைத்துத் தங்கியுள்ளனர். கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த இன்று காலை 10 மணிக்குப் பிறகு பம்பையில் இருந்து பக்தர்கள் மேலே செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்புக் கருதி இன்று தரிசன அனுமதி 30,000 பேராகக் குறைக்கப்பட்டுள்ளது. உயரமான மரங்களில் ஏறக்கூடாது, வனப்பகுதிக்குள் சமையல் செய்யக்கூடாது போன்ற கடும் கட்டுப்பாடுகளைப் போலீசார் விதித்துள்ளனர். மகரஜோதி தரிசனம் முடிந்த பிறகு பக்தர்கள் ஊர் திரும்ப ஏதுவாகக் கேரள அரசு சார்பில் 1,000 சிறப்புப் பேருந்துகள் தயார் நிலையில் உள்ளன. இதுவரை இந்த சீசனில் 12 லட்சம் பக்தர்கள் அய்யனைத் தரிசித்துள்ளதாகத் தேவசம் போர்டு தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சபரிமலையில் ஒலித்த "சாமியே சரணம் ஐயப்பா" கோஷம்..!! மார்கழி குளிரிலும் பக்தர்கள் திரண்டு தரிசனம்..!!
இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (14-01-2026)..!! போகி திருநாளில் கிரகங்களின் சஞ்சாரம் எப்படி?