×
 

ஆவணி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு!

ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்பட்டது; பக்தர்கள் நாளை முதல் ஆகஸ்ட் 21 வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

ஆவணி மாதப் பிறப்பு மற்றும் மாதாந்திர சிறப்புப் பூஜைகளுக்காகப் புகழ்பெற்ற சபரிமலை ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோயில் நடை இன்று (ஆகஸ்ட் 16) மாலை 5 மணிக்கு முறைப்படி திறக்கப்பட்டது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், ஒவ்வொரு தமிழ் மற்றும் மலையாள மாதப் பிறப்பின் போதும் மாதாந்திரப் பூஜைகளுக்காக நடை திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், ஆவணி மாத பூஜைக்காக இன்று மாலை 5:00 மணியளவில் கோயில் தந்திரியின் முன்னிலையில் மேல்சாந்தி நடையைத் திறந்து தீபாராதனை நடத்தினார்.

இன்று நடை திறக்கப்பட்டாலும் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெறும் என்பதால், நாளை (ஆகஸ்ட் 17) அதிகாலை முதல் ஆவணி மாதப் பிறப்பை முன்னிட்டு நெய்யபிஷேகம், உஷபூஜை, கணபதி ஹோமம், சகஸ்ரகலசாபிஷேகம் உள்ளிட்ட அனைத்துச் சிறப்பு வழிபாடுகளும் தொடங்க உள்ளன. நாளை முதல் ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை 5 நாட்களுக்குத் தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

இதையும் படிங்க: திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்..!! நேர ஒதுக்கீடு தரிசன டிக்கெட் விநியோகம் ரத்து!

தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காகப் பம்பை, நிலக்கல் மற்றும் சன்னிதானம் ஆகிய பகுதிகளில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு மற்றும் கேரளா காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு மற்றும் குடிநீர், மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 21-ஆம் தேதி இரவு அத்தாழ பூஜைக்குப் பிறகு அரிவராசனம் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும்.

 

இதையும் படிங்க: இன்றைய ராசிபலன் (15-08-2026)..!! மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share