திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் முதல்முறை.. கோடியில் கிடைத்த உண்டியல் காணிக்கை..!!
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கையில் முதன்முறையாக ரூ.1 கோடியே 5 லட்சம் கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டின் ஆன்மிக மையமான மதுரையில் இருந்து வெறும் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். ஆறுபடை வீடுகளில் முதல் படைவீடாக விளங்கும் இந்த கோவில், முருகனின் சனாதன பெருமையை சூழ்ந்து நிற்கிறது. 6ஆம் நூற்றாண்டில் பாண்டியர்களால் கட்டப்பட்ட இந்த ராக்-கட் (குகை) கோவில், தமிழ் சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படையிலும் புகழ்பெற்றது.
இந்த கோவிலின் வரலாறு, புராணங்களுடன் பின்னிப்பிணைந்துள்ளது. ஸ்கந்த புராணத்தின்படி, அரக்கர் சூரபத்மனை வீழ்த்திய முருகன், தேவேந்திரனின் மகள் தேவசேனையுடன் (தெய்வானை) இங்கேயே திருமணம் செய்துகொண்டார். இந்த தெய்வீக திருமணத்தால், திருப்பரங்குன்றம் தமிழர்களின் மிகவும் சித்தமான திருமண இடமாக மாறியது. பக்தர்கள் இங்கு திருமணம் செய்துகொண்டால், குடும்ப வாழ்க்கை இன்பமானதாக இருக்கும் என நம்புகின்றனர்.
இதையும் படிங்க: கோவிந்தா.. கோவிந்தா..!! திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கருட சேவை.. ஆரவாரத்துடன் கிளம்பிய திருக்குடைகள்..!!
கோவிலின் முக்கிய சன்னதியில் முருகன் உட்கார்ந்த நிலையில் தோன்றுகிறார். குகையில் செதுக்கப்பட்ட சிவன், விஷ்ணு, துர்கை, விநாயகர் சன்னதிகள், கட்டிடக்கலையின் சிறப்பை வெளிப்படுத்துகின்றன. நந்தி, மயில் போன்ற வாகன சிலைகள், மகிஷாசுர மர்த்தினி கற்பனைகள் ஆகியவை கோவிலை அழகாக அலங்கரிக்கின்றன.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உள்ள 40 நிரந்தர உண்டியல்களில் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தாங்கள் நினைத்தது நிறைவேண்டும் என வேண்டி பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த வகையில் உண்டியல்கள் அனைத்தும் நிரம்பியதும் மாதம் ஒருமுறை திறந்து எண்ணப்படும். ஆனால் கடந்த மாதம் உண்டியல் காணிக்கை எண்ணப்படவில்லை.
இந்த சூழலில் நேற்று கோவில் துணை கமிஷனர் எம்.சூரியநாராயணன் மேற்பார்வையில் உண்டியல்கள் அனைத்தும் திறந்து எண்ணப்பட்டன. இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உதவி கமிஷனர் இளங்கோ, இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் இளவரசி, கோவில் உள்துறை சூப்பிரண்டுகள் சுமதி, சத்தியசீலன், அலுவலக சூப்பிரண்டு ரஞ்சனி, ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் காணிக்கை எண்ணப்பட்டன. காலை 9 மணிக்கு தொடங்கிய காணிக்கை எண்ணும் பணி இரவு 9 மணி வரை நடைபெற்றது.
காணிக்கை எண்ணும் பணியில் கோவில் துணை கமிஷனரின் நேர்முக உதவியாளர் மணிமாறன், கோவில் ஊழியர்கள், வேத சிவாகம பாடசாலை மாணவர்கள், மற்றும் திருப்பரங்குன்றம் ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், பக்தர்கள் பேரவையின் உறுப்பினர்கள் ஆகியோர் ஈடுபட்டனர். முடிவில் உண்டியல் காணிக்கை ரூ.1 கோடியே 5 லட்சத்து ஆயிரத்து 654 ரொக்கமாக கிடைத்தது. மேலும் 201 கிராம் தங்கமும், 3.902 கிலோ வெள்ளியும் கிடைத்தது. வழக்கமாக லட்சத்தில் வரும் உண்டியல் காணிக்கை இந்த முறை கோடியை தொட்டுள்ளது. திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.
இதையும் படிங்க: விழாக்கோலம் பூண்ட மைசூரு.. கோலாகலமாக தொடங்கிய தசரா விழா..!!