மாணவர்கள் உதவித்தொகையில் மோசடி! ரூ.11 கோடி சுருட்டல்! தமிழக அதிகாரிகள் மீது சி.பி.ஐ., வழக்கு!
மத்திய அரசால் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையில், 11.40 கோடி ரூபாய் மோசடி செய்த தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில அரசு அதிகாரிகள் மீது சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் உதவித்தொகையில் பெரும் மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகம், உத்தர பிரதேசம், கேரளா, ஜம்மு-காஷ்மீர், டெல்லி ஆகிய ஐந்து மாநில அரசு அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த மோசடியில் மொத்தம் ரூ.11.40 கோடி அபகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சார்பில், பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உயர்கல்வி சேர்க்கை, சீருடை, காலணி, குடை வழங்குதல் உள்ளிட்ட திட்டங்களுக்காக உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2024-ஆம் ஆண்டு இறுதியில் குடை வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, மத்திய அமைச்சக செயலர் அளித்த புகாரின் பேரில் சிபிஐ ஓராண்டாக விசாரணை நடத்தியது.
விசாரணையில் 28 கல்வி நிறுவனங்களை மையமாகக் கொண்டு 926 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டதாக கூறப்பட்டது தெரியவந்தது. ஆனால் இந்த நிறுவனங்கள் செயல்பாட்டிலேயே இல்லை என்பது அதிர்ச்சி தகவல். இல்லாத மாணவர்களின் பெயரில் போலியாக உதவித்தொகை பெறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 2வது நாளாக ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை! புதுச்சேரியில் கூட்டணி கட்சியில் இழுபறி!
ஜம்மு-காஷ்மீரில் 2017-இல் மூடப்பட்ட ஒரு நிறுவனத்தின் பெயரில் தேசிய உதவித்தொகை இணையதளத்தை பயன்படுத்தி மோசடி நடத்தப்பட்டது. தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் இதேபோன்ற போலி மாணவர்கள் பெயரில் உதவித்தொகை அபகரிக்கப்பட்டுள்ளது.
சிபிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “நாடு முழுவதும் 926 போலி பயனாளிகளை மையமாகக் கொண்டு ரூ.11.40 கோடி மோசடி நடந்துள்ளது. தமிழகம், உத்தர பிரதேசம், கேரளா, ஜம்மு-காஷ்மீர், டெல்லி அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தொடர்ந்து விசாரணை நடைபெறும்” என்றார்.
இந்த மோசடி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உதவித்தொகையை தவறாக பயன்படுத்தியுள்ளது என்பதால் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு இனி இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இந்த மோசடியில் எந்த அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவரும்.
இதையும் படிங்க: ஓட்டுக்கு பணம் பட்டுவாடா?! தேர்தல் கமிஷன் கிடுக்குப்பிடி! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு!