திருமண மண்டபம் உரிமையாளர் கொலையில் திடுக் திருப்பம்... வெளியானது ஷாக்கிங் காரணம்...!
கல்லிடைக்குறிச்சியில் திருமண மண்டப உரிமையாளர் வெட்டிக்கொலை; 2 வாலிபர்கள் கைது. நகை, பணத்தை திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்ததால் வெறிச்செயல்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த கண்ணன் (வயது 52) என்பவர் அம்பாசமுத்திரத்தில் இருந்து ஊர்காடு செல்லும் சாலையில் திருமண மண்டபம் நடத்தி வந்தார்.
தற்போது மனைவி சாந்தி, 10-ம் வகுப்பு படிக்கும் மகள் லட்சுமி பிரியாவுடன் கல்லிடைக்குறிச்சி அகஸ்தியர் கோவில் சன்னதி தெரு பகுதியில் வசித்து வந்தார்.
இவரது மகள் கல்லிடைக்குறிச்சி குத்துக்கல் தெருவில் டியூசன் படித்து வருகிறார்.
நேற்று இரவு மகளை அழைத்து வருவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் கண்ணன் சென்றார். டியூசன் அருகே சென்றபோது, அந்த பகுதியில் மறைந்திருந்த மர்ம நபர்கள் திடீரென்று கண்ணனை சுற்றிவளைத்து தாங்கள் கொண்டு வந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் கண்ணன் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து உடனடியாக கல்லிடைக்குறிச்சி போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர். மேலும் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஷ்வேஸ் பா.சாஸ்திரி தலைமையிலான போலீசார் சம்பவ இ்டத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அவரது உத்தரவின்பேரில் 3 தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடினர். கண்ணன் எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: கொலை நகரமாகிறதா கோவை?... 36 நாளில் 11 அதிர்ச்சி சம்பவங்கள்... துப்பு துலக்க முடியாமல் திண்டாடும் காவல்துறை...!
இதில் அம்பையை சேர்ந்த வெங்கடேஷ்(30) மற்றும் அவரது கூட்டாளியான பிரம்மதேசத்தை சேர்ந்த சூர்யா இசக்கி (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து இன்று காலையில் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
போலீசாரின் விசாரணையில், கண்ணன் தனது தொழிலை மேம்படுத்திட வேண்டி வெங்கடேசிடம் கடந்த 7 ஆண்டுகளுக்கு சுமார் 50 சவரன் நகைகளை மற்றும் 23 லட்சம் பணம் வாங்கி உள்ளார். மேலும் சுமார் 11 லட்சம் பணத்தை திருப்பி கொடுத்த நிலையில் மீதமுள்ள பணம் மற்றும் நகையை கண்ணன் திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் கண்ணனுக்கும் வெங்கடேஷின் சகோதரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ் நேற்று தனது கூட்டாளியுடன் சேர்ந்து வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.
கைதான 2 வாலிபர்கள் மீதும் வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொலையில் தொடர்புடைய மேலும் 1 வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கடலூரில் நகைக்காக மூதாட்டி கொலை.. காது, மூக்கை அறுத்து கொடூரம்... கவரிங் என தெரிந்ததும் கொடூரன் செய்த காரியம்...!