"என்னை கொலை செய்துவிடுவாரோ என பயமாக இருக்கிறது"... பெற்றோரிடம் கதறிய இளம்பெண் அதே இரவில் வெட்டிக்கொலை!
ஆத்திரம் அடைந்த அவர் வீட்டில் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து வந்து மனைவியை சரமாரியாக வெட்டினார். தன்னை கொலை செய்ய வேண்டாம் என மனைவி கெஞ்சியும் ஈவு இரக்கம் இன்றி வெட்டி கொலை செய்தார். பின்னர் போலீசில் சரணடைந்தார்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் குடும்பத் தகராறு மற்றும் சந்தேகத்தின் காரணமாக இளம்பெண் ஒருவர் கணவரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே, "என்னை கணவர் கொலை செய்து விடுவாரோ என்று பயமாக இருக்கிறது" என தனது பெற்றோரிடம் வீடியோ கால் மூலம் கூறியிருந்தது இந்த சம்பவத்தை மேலும் சோகமாக மாற்றியுள்ளது.
குண்டூர் மாவட்டம் தெனாலி அருகே அங்கலக்குடுரு பகுதியைச் சேர்ந்த நரேந்திர பாபு என்பவர் அடகுக் கடை நடத்தி வந்தார். அவரது மனைவி சந்தியா ராணி (27). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நரேந்திர பாபுவுக்கு மதுப் பழக்கம் இருந்ததாகவும், குடும்பச் செலவுக்குப் பணம் கொடுக்காமல் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து சந்தியா ராணி தனது குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றார். பின்னர், இனிமேல் தகராறு செய்ய மாட்டேன் என்று உறவினர்கள் முன்னிலையில் உறுதி அளித்த நரேந்திர பாபு, மனைவியை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா? ஆந்திராவை தொடர்ந்து கர்நாடகத்தில் அதிகரிக்கும் பாதிப்பு... பகீர் ரிப்போர்ட்!
இதற்கிடையில், சந்தியா ராணி செல்போனில் அடிக்கடி பேசுவதை பார்த்த நரேந்திர பாபுவுக்கு சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், முன்கூட்டியே ஒரு பெரிய கத்தியை வாங்கி வீட்டில் மறைத்து வைத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தன்று இரவு மது போதையில் வீட்டுக்கு வந்த நரேந்திர பாபு, மனைவியிடம் செல்போனில் யாருடன் பேசுகிறாய் என்று கேட்டு தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சந்தியா ராணியை பலமுறை தாக்கியதாக கூறப்படுகிறது. உயிரைக் காப்பாற்றும்படி அவர் கெஞ்சிய போதிலும் தாக்குதலை நிறுத்தாமல் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் நரேந்திர பாபு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இந்த சம்பவத்தில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால், கொலை நடந்த அதே நாளில் காலை சந்தியா ராணி தனது பெற்றோருக்கு வீடியோ கால் செய்து, "கணவரின் நடத்தை மாறவில்லை. அவர் என்னை கொலை செய்து விடுவாரோ என்று பயமாக இருக்கிறது" என்று கூறியிருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவர் கூறிய அச்சம் சில மணி நேரங்களிலேயே உண்மையாகி விட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, குடும்ப வன்முறை மற்றும் கொலைக்கான காரணங்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பவன் கல்யாணுக்கு ஆப்ரேஷன்! நேரில் நலம் விசாரித்த சந்திரபாபு நாயுடு!! உடல்நிலை குறித்து வெளியான முக்கிய அப்டேட்!