திருட சென்ற கடைக்கு தீ வைத்த வாலிபர்! கலெக்ஷன் கம்மியாக இருந்ததால் ஆத்திரம்!! கடையநல்லூரில் விநோதம்!
அதிகாலை அருகிலுள்ள டீக்கடைக்காரர் டீக்கடையை திறக்க வந்தபோது கண்ணனுடைய பலசரக்குக் கடை தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி காவல் நிலையம் அருகில், மதுரை–தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் கண்ணன் என்பவர் பலசரக்குக் கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் அவர் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றிருந்தார். மறுநாள் அதிகாலையில் அருகிலுள்ள டீக்கடையை திறக்க வந்த ஒருவர், கண்ணனின் கடையில் தீ பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக கடை உரிமையாளருக்கும் அப்பகுதி மக்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கண்ணன் மற்றும் அக்கம்பக்கத்தினர் இணைந்து தீயை அணைத்தனர். இருப்பினும், கடையில் இருந்த சுமார் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த சொக்கம்பட்டி போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஒருவர் கடைக்குள் நுழைந்தது பதிவாகியிருந்தது.
இதையும் படிங்க: தலைக்கேறிய மதுபோதை! வீடுபுகுந்து பாலியல் தொல்லை!! வடமாநில இளைஞரை அடித்தே கொன்ற மக்கள்!
இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், கடையநல்லூர் அருகே உள்ள மேலகடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் (31) என்பவர் சம்பவத்தில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் வெளியான தகவல் போலீசாரையே அதிர்ச்சியடையச் செய்தது. கடைக்குள் திருடுவதற்காக நுழைந்த லட்சுமணன், கல்லா பெட்டியில் வெறும் ரூ.1,500 மட்டுமே இருந்ததை பார்த்து ஏமாற்றமடைந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், கடைக்கு தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், லட்சுமணன் மீது சேர்ந்தமரம், கடையநல்லூர், சொக்கம்பட்டி உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் ஏற்கனவே ஐந்துக்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். திருடச் செல்லும் இடங்களில் பணம் குறைவாக இருந்தால் தீ வைத்து சேதப்படுத்துவது அவரது வழக்கமான செயல்முறையாக இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரூ.50,000க்கு மனைவியை நண்பர்களுக்கு விற்ற கணவன்! தனி அறையில் அடைத்து வைத்து 4 பேர் சிரழித்த கொடூரம்!!