×
 

சென்னை பெசன்ட் நகரில் தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டி படுகொலை! பழிக்குப் பழியா? போலீஸ் தீவிர விசாரணை

நேற்று இரவு வெளியே சென்று உணவு சாப்பிட்டுவிட்டு ராமசாமி அவென்யூவில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு கண்ணன் வந்துள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், அலுவலகத்தின் வாசல் அருகே அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

சென்னை: பெசன்ட் நகர் வண்ணாந்துறை பகுதியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஒருவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்கு பழைய முன்விரோதம் காரணமா, அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெசன்ட் நகர் சாஸ்திரி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வண்ணாந்துறை பகுதியில் வசித்து வந்தவர் கண்ணன் (46). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர், அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த காலத்தில் அ.தி.மு.க.வில் 174-வது தெற்கு வட்ட கழகச் செயலாளராக இருந்த கண்ணன், சுமார் 2 மாதங்களுக்கு முன்பு அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு வெளியே சென்று உணவு சாப்பிட்டுவிட்டு ராமசாமி அவென்யூவில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு கண்ணன் வந்துள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், அலுவலகத்தின் வாசல் அருகே அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பரந்தூருக்கு பதில் 2 இடங்கள் தேர்வு! விஜய் அரசு எடுத்த முக்கிய முடிவு! சென்னையின் 2-வது ஏர்போர்ட் எங்கே அமையும்?

இருசக்கர வாகனங்களில் வந்த 6-க்கும் மேற்பட்ட நபர்கள் ஹெல்மெட் அணிந்திருந்ததாகவும், அவர்கள் கண்ணனை ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சாஸ்திரி நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். கண்ணனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

சம்பவ இடத்தில் அடையாறு காவல் மாவட்ட துணை ஆணையர் கார்த்திகேயன் மற்றும் சாஸ்திரி நகர் காவல் ஆய்வாளர் ரோகிணி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கொலை நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, திருவான்மியூர் பகுதியில் நடைபெற்ற வேலு கொலை வழக்குடன் கண்ணனுக்கு தொடர்பு இருந்ததா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக பழிக்குப் பழியாக இந்த கொலை நடந்ததா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

மேலும், கண்ணன் சமீபத்தில் அ.தி.மு.க.வில் இருந்து விலகி தவெகவில் இணைந்தது தொடர்பாக ஏதேனும் முன்விரோதம் ஏற்பட்டதா, அல்லது ரியல் எஸ்டேட் தொழில் உள்ளிட்ட தனிப்பட்ட காரணங்கள் உள்ளனவா என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கொலை சம்பவத்தையடுத்து அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆளுங்கட்சியைச் சேர்ந்ததாக கூறப்படும் அரசியல் நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகளை கண்டறிந்து கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு... வடமாநிலங்களில் விஜய்க்கு கிடைக்கும் கவனம்! சந்திக்க காத்திருக்கும் எம்.பி.,க்கள்?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share