செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் மீண்டும் அதிர்ச்சி! வார்டனை அறைக்குள் பூட்டிவிட்டு 11 சிறுவர்கள் எஸ்கேப்!
தப்பியோடிய 11 பேரில் ஒருவர் போலீசாரிடம் சிக்கியுள்ளார். அவரை மீண்டும் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 சிறுவர்களை கண்டுபிடிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்த 11 சிறுவர்கள் வார்டனை தாக்கிவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களில் ஒருவர் மீண்டும் பிடிபட்ட நிலையில், மேலும் 10 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் திருட்டு, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல், கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சிறார்கள் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், நேற்றிரவு அங்கிருந்த வார்டனை சில சிறுவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
பின்னர் வார்டனை ஒரு அறைக்குள் தள்ளி கதவை வெளிப்புறமாக பூட்டியதாகவும், இதையடுத்து 11 சிறுவர்களும் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிச் சென்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மேல்மருவத்தூர் ஆடிப்பூரம்... ஆகஸ்ட் 14ல் செங்கல்பட்டுக்கு உள்ளூர் விடுமுறை..!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
சிறுவர்கள் தப்பிய தகவல் கிடைத்ததும் செங்கல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையை தொடங்கினர். கூர்நோக்கு இல்லத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள், தப்பிச் சென்ற சிறுவர்கள் சென்றிருக்கக்கூடிய வழித்தடங்கள் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஐமான் ஜமால் கூர்நோக்கு இல்லத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தப்பியோடிய சிறுவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதில், தப்பியோடிய 11 பேரில் ஒருவர் போலீசாரிடம் சிக்கியுள்ளார். அவரை மீண்டும் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 சிறுவர்களை கண்டுபிடிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பழமை வாய்ந்த இந்த சீர்திருத்தப் பள்ளியில் சிறுவர்கள் தப்பியோடுவது தொடர்ச்சியாக நடைபெற்று வருவது தற்போது கேள்வியை எழுப்பியுள்ளது. கடந்த 8 மாதங்களில் மட்டும் இது மூன்றாவது தப்பியோட்ட சம்பவம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 12 சிறுவர்கள் இதே கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது தப்பிய சிறுவர்கள் பொதுமக்களை தாக்கி, பைக்குகள் மற்றும் செல்போன்களை பறித்துச் சென்றதாக கூறப்பட்டது. பின்னர் சிறப்புப் படையினர் தேடுதல் நடத்தி, கோவை மற்றும் சென்னையில் அவர்களை பிடித்தனர்.
தொடர்ச்சியாக நடைபெறும் இதுபோன்ற சம்பவங்களால், கூர்நோக்கு இல்லத்தின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. தற்போதைய சம்பவத்திலும் தப்பியோடிய 10 சிறுவர்களை விரைவாக பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் ஆட்சியிலும் இதே கதையா? பணியிடமாற்றத்தை ரத்து செய்ய மேல்மட்டத்தில் ‘பேரம்’?!