கோவை மாணவி வன்கொடுமை வழக்கு: செல்போன் ஆதாரங்களுடன் 270 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!
கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், செல்போன் உரையாடல்கள் அடங்கிய 270 பக்க கூடுதல் குற்றப்பத்திரிகையை போலீசார் இன்று தாக்கல் செய்தனர்.
கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளின் செல்போன் உரையாடல்கள் மற்றும் தடயவியல் ஆய்வறிக்கைகள் அடங்கிய 270 பக்க கூடுதல் குற்றப்பத்திரிகையை மகளிர் நீதிமன்றத்தில் போலீசார் இன்று தாக்கல் செய்தனர்.
தமிழகத்தையே உலுக்கிய கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில், பீளமேடு போலீசார் இன்று மிக முக்கியமான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி கோவை சர்வதேச விமான நிலையப் பகுதியில் தனது ஆண் நண்பருடன் இருந்த கல்லூரி மாணவியை, மூன்று வாலிபர்கள் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த விவகாரத்தில் சிவகங்கையைச் சேர்ந்த கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் மதுரையைச் சேர்ந்த தவசி ஆகியோர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி சிவகுமார் முன்னிலையில் இன்று நடைபெற்றது. ஏற்கனவே கடந்த மாதங்களில் 50 மற்றும் 200 பக்கக் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று மூன்றாம் கட்டமாக 270 பக்கங்கள் கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். இதில், கைது செய்யப்பட்ட மூவரின் செல்போன்களிலிருந்து மீட்கப்பட்ட உரையாடல்கள், வீடியோ ஆதாரங்கள் மற்றும் தடயவியல் நிபுணர்களின் முழு ஆய்வறிக்கைகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்தத் தொழில்நுட்ப ஆதாரங்கள் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தருவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஐந்தடுக்கு பாதுகாப்பில் கோவை! துணை குடியரசு தலைவர் வருகையால் ட்ரோன்களுக்கு தடை!
இன்று மதியம் கோவை மத்திய சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் குற்றவாளிகள் மூவரும் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். போலீசாரால் சுடப்பட்டதில் காலில் பலத்த காயமடைந்த காளீஸ்வரன், இன்னும் முழுமையாகக் குணமடையாததால் மற்ற இரு குற்றவாளிகளின் உதவியுடன் கைத்தாங்கலாக நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டான். வழக்கை விசாரித்த நீதிபதி சிவகுமார், அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜனவரி 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் குற்றவாளிகள் மூவரையும் மீண்டும் நேரில் ஆஜர்ப்படுத்த வேண்டும் எனப் போலீசாருக்கு அறிவுறுத்தினார். குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட தரப்பு வழக்கறிஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: "எங்க கூட்டணிக்கு எடப்பாடி தான் பாஸ்!" கூட்டணித் தலைவர் இ.பி.எஸ் தான்; நயினார் ஓப்பன் டாக்!