மக்களே உஷார்... இப்படி யாராவது சொன்னால் நம்பாதீங்க... ஒரு வாரத்தில் மட்டும் 50 பேரிடம் கைவரிசை...!
தனியார் இணையதள முகவரி மூலம் டிக்கெட் ரத்து செய்து தருவதாக கூறி மோசடி செய்யும் மர்ம கும்பல் - கோவையில் 50 பேரிடம் மோசடி.
ஆன்லைன் பயன்பாடு அதிகரித்து உள்ளதால் அதன் மூலம் மோசடி நடப்பதும் அதிகரித்துவிட்டது. அதிக லாபம் தருவதாக மோசடி, கடன் வாங்கி தருவதாக மோசடி, டிஜிட்டல் கைது செய்வோம் என்றுக்கூறி மோசடி, போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி மோசடி என்று மோசடி நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் ஆன்லைன் மூலம் டிக்கெட் மற்றும் ஓட்டல் அறை புக்கிங் ரத்து செய்ய தனியார் இணையதளத்தை போல போலி முகவரியை உருவாக்கி, அதில் செல்போன் எண்ணை மோசடி ஆசாமிகள் பதிவேற்றம் செய்கிறார்கள். அது தெரியாமல், பொதுமக்கள் அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டால், அவர்களிடம் லாவகமாக பேசி தங்கள் மோசடியை அரங்கேற்றம் செய்து வருகிறார்கள். எனவே இந்த விஷயத்தில் பொதுமக்கள் உஷாராக இ ருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
அண்மையில் கோவைப்புதூர் பகுதியை சேர்ந்த 60 வயது மூதாட்டி ஒருவர் இணையதளம் மூலம் ஹோட்டலில் அறை புக் செய்துள்ளார். பின்னர் பயணத்திட்டம் மாறியதால் அதனை ரத்து செய்ய இணையதளத்திற்கு சென்று செல்போன் எண் எடுத்துள்ளார். பிறகு அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது இணையதளத்தில் வரும் செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்து அதில் வங்கியின் உள்ளிட்ட விவரங்களை கொடுத்தால் அறை புக் செய்ய செலுத்தப்பட்ட பணம் திரும்ப வரும் என கூறியுள்ளார். இதை நம்பி மூதாட்டி செயலியில் விவரங்களை கொடுத்த நிலையில், வங்கிக் கணக்கில் இருந்த ரூ.18 லட்சத்தை மர்ம நபர்கள் திருடியுள்ளனர்.
இதையும் படிங்க: உச்சகட்ட பதற்றம்! நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி ராஜினாமா...
இதையடுத்து அவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கடந்த ஒரே வாரத்தில் மட்டும் சுமார் 50 நபர்கள் மோசடி கும்பலிடம் சிக்கியுள்ளனர்.
பொதுவாக ரயில் டிக்கெட், பேருந்து , விமானம் மூலம் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்த பின்னர், சில காரணத்துக்காக அந்த டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டும் என்றால், அதற்கான செயலிக்குள் சென்று, அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். ஆனால் சிலர் இது தெரியாமல் செல்போன் மூலம் பேச முடியுமா என்று இணையதளத்தில் தேடுகிறார்கள். அப்போது போலி செயலி மற்றும் இணையதள முகவரி மூலம் உண்மையானதுபோன்று இணையதள முகவரியை உருவாக்கி கூகுளில் பதிவேற்றம் செய்கிறார்கள். அது தெரியாமல் நாம் தேடும்போது இந்த போலி இணையதள முகவரிதான் முதலில் வரும்.
உடனே அதில் இருக்கும் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசும்போது, நாங்கள் உடனே முன்பதிவு செய்ததை ரத்து செய்து பணத்தை உங்கள் வங்கி கணக்குக்கே செலுத்திவிடுகிறோம் என்று மோசடி கும்பல் பேசி, நம்பிக்கையை ஏற்படுத்துகிறார்கள்.
தொடர்ந்து, எந்த வங்கி கணக்குக்கு பணம் அனுப்பி வைக்க வேண்டும் என்று பேசி வங்கி கணக்கு எண்ணை வாங்குகிறார்கள். பின்னர் அந்த வங்கி கணக்கை வாங்கி அதில் பணம் ஏதும் இருக்கிறதா எனறு சோதனை செய்து அதில் பணம் இல்லை என்றால் உடனே பேசி, நீங்கள் தினமும் பரிவர்த்தனை செய்யும் வங்கி கணக்கை கொடுங்கள், அப்போதுதான் பணத்தை அனுப்ப வசதியாக இருக்கும் என்று பேசி நம்ப வைக்கிறார்கள்.
பின்னர் வங்கி கணக்கை பெற்ற பின்னர், சோதனை செய்வதற்காக உங்கள் வங்கி கணக்குக்கு ரூ.1 மட்டும் அனுப்பி உள்ளோம், அது வந்து உள்ளதா என்று பாருங்கள் என்று கூறுகிறார்கள். மக்களும் பார்த்து வந்துவிட்டது என்று சொன்னதும், உங்கள் செல்போனுக்கு ஒரு ஓ.டி.பி. (ஒருமுறை பயன்படுத்தும் ரகசிய எண்) வந்து இருக்கிறது, அதை கூறுங்கள் என்று கேட்பார்கள்.
அந்த ஓ.டி.பி. எண்ணை சொல்லிவிட்டால், நமது வங்கி கணக்கில் எவ்வளவு பணம் உள்ளதோ அந்த பணம் அனைத்தையும் அபேஸ் செய்துவிடுகிறார்கள்.
பொதுவாக இணையதளத்துக்கு செல்லும்போது எச்.டி.டி.பி.எஸ். என்று தொடங்கும் முகவரியையே தேர்வு செய்ய வேண்டும். எச்.டி.டி.பி. என்று தொடங்கும் இணையதள முகவரி என்றால் அது மோசடி கும்பலின் இணையதளம் ஆகும். எனவே முன்பதிவு டிக்கெட்டை ரத்து செய்கிறோம் என்று இதுபோன்ற முகவரிக்குள் சென்றால் யாராவது தொடர்பு கொண்டு பேசினால் அதை நம்ப வேண்டாம். இதில் பொதுமக்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க: நாட்டையே கொளுத்திய GEN-Z தலைமுறை... பற்றி எரியும் நேபாள நாடாளுமன்றம்