சொத்து, அரசு வேலைதான் முக்கியம்!! அம்மாவையே கூலிப்படை ஏவி கொன்ற மகள் கைது!!
ராஜஸ்தானில் குடும்ப சொத்து மற்றும் கருணை அடிப்படையில் அரசு பணி பெறும் நோக்கில், 23 வயது இளம்பெண், தன் தாயை கூலிப்படையை ஏவி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த நீரஜ் சர்மா (45) என்ற பெண் நீதிமன்ற எழுத்தராக பணியாற்றி வந்தார். கடந்த 3-ம் தேதி மகனை பயிற்சி மையத்தில் இறக்கிவிட்டு மொபட்டில் வீடு திரும்பும் வழியில் ஸ்கார்பியோ கார் ஒன்று அவரது வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.
130 கி.மீ. வேகத்தில் வந்த கார், நீரஜ் சர்மாவை 100 அடி தூரம் தூக்கி வீசியது. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். முதலில் விபத்து என நம்பப்பட்ட இந்த சம்பவம், போலீசாரின் தீவிர விசாரணையில் திட்டமிட்ட கொலை என உறுதியானது.
நீரஜ் சர்மாவின் கணவர் கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில், கருணை அடிப்படையில் அரசு வேலைக்கு அவரது மகள் ஆயுஷி விண்ணப்பித்திருந்தார். ஆனால் தாய் நீரஜ் சர்மா அந்தப் பணியில் சேர்ந்தார். இதனால் ஆயுஷிக்கு அதிருப்தி ஏற்பட்டது. குடும்ப சொத்து பிரிப்பு விவகாரத்திலும் தாய்-மகள் இடையே தகராறு நீண்டகாலமாக இருந்து வந்தது. தாயை கொன்றால் அரசு வேலையும் சொத்தும் தனக்கு கிடைக்கும் என ஆயுஷி திட்டமிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சரணடைய தயார்!! ஷேக் ஹசீனா திட்டவட்டம்! டிசம்பரில் வங்கதேசம் திரும்ப திட்டம்!!
இதற்காக தன் பெரியப்பா மோகன் ஸ்வரூப் உள்ளிட்ட உறவினர்களின் உதவியை நாடிய ஆயுஷி, பரத்பூரைச் சேர்ந்த கூலிப்படைக்கு 7 லட்சம் ரூபாய் கொடுத்து தாயை கொலை செய்ய ஏற்பாடு செய்தார். ஒரு மாதமாக நீரஜின் நடவடிக்கைகளை கண்காணித்த கூலிப்படையினர், முதலில் ஒரு முறை கொலை முயற்சி தோல்வியடைந்த பின்னர், கடந்த 3-ம் தேதி வெற்றிகரமாக செய்து முடித்தனர்.
போலீசார் சம்பவ இட கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, வழக்கை தீவிரப்படுத்தினர். தீவிர விசாரணையில் 7 பேரை கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியான ஆயுஷியும் அடக்கம். தலைமறைவாக உள்ள மற்றொரு உறவினரான பால்ராமை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த கொடூர சம்பவம் ராஜஸ்தான் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப உறவுகளில் ஏற்பட்ட பேராசை இப்படியொரு கொலையில் முடிந்திருப்பது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. போலீசார் மேலும் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: #BREAKING: 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க தடை... உயர்நீதிமன்றம் அதிரடி ஆணை..! அரசியலில் பரபரப்பு..!!