நியாயமான தேர்தல்னா வெளிப்படைத்தன்மை இருக்கலாமே! முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி..!
நியாயமான தேர்தல் தான் இலக்கு என்றால் வெளிப்படைத்தன்மை இருக்கலாமே என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் புகார்கள், அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரம், இந்திய தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையையும், தேர்தல் செயல்முறைகளின் வெளிப்படைத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. குறிப்பாக, 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன.
காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி, 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் மகாராஷ்டிரம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் முறைகேடுகள் மற்றும் வாக்குத் திருட்டு தொடர்பாக ராகுல் காந்தி தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி முன்வைத்து வருவதாகவும் அவர் அரசியலமைப்பை அவமதிப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது திட்டமிட்டு தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம் சுமத்தப்படுவதாகவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார்.
இதையும் படிங்க: "TEA WITH DEAD VOTERS".. தேர்தல் ஆணையத்தை கிண்டலடித்த ராகுல் காந்தி..!!
இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் சரமாரி கேள்விகளை முன் வைத்துள்ளார். வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தியும், எப்படி இத்தனை தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர் என்று கேட்டுள்ளார். புதிய வாக்காளர்களின் பதிவு வழக்கத்திற்கு மாறாகக் குறைவாக உள்ளது என்றும் இந்த இளம் வாக்காளர்கள் கணக்கெடுக்கப்பட்டனரா., தகுதிக்குரிய நாளில் 18 வயது நிறைவுற்ற எத்தனை இளம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர் என்பதைச் சொல்லும் தரவுகள் ஏதேனும் இருக்கிறதா எனவும் கேள்வி எழுப்பினார்.
Registration of Electors Rules, 1960-இன்கீழ் கொடுக்கப்பட்டுள்ள விசாரணை மற்றும் இரண்டு முறையீடு நடைமுறைக்கான காலவரையறை, எதிர்வரும் பீகார் மாநிலத் தேர்தலில் பெருமளவிலான வாக்காளர்களை விலக்கும் வாய்ப்புள்ளது என்றும் இவ்விவகாரத்தைத் தேர்தல் ஆணையம் எவ்வாறு தீர்க்கப் போகிறது எனவும் கேட்டார்.
பிற மாநிலங்களில் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) மேற்கொள்ளப்படும்போது, இந்த நடைமுறைச் சிக்கல்களைத் தேர்தல் ஆணையம் கணக்கில்கொள்ளுமா என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், மறைந்த வாக்காளர்களின் பெயரை நீக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் தாங்கள் முறையிட்டதாகவும்.,இது எப்போது நிறைவேற்றப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுள்ளார்.
வாக்காளரின் உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணமாக ஆதாரை ஏற்கத் தேர்தல் ஆணையத்தைத் தடுப்பது எது என்றும் நியாயமான தேர்தல்கள் என்பதே தேர்தல் ஆணையத்தின் இலக்காக இருக்குமானால், அது மேலும் வெளிப்படைத்தன்மையுடனும் வாக்காளர்களுக்கு நெருக்கமாகவும் இருக்கலாமே என்றும் கூறினார்.
இதையும் படிங்க: சொத்துக்குவிப்பு! சிக்கலில் அமைச்சர் ஐ.பெரியசாமி... உச்சநீதிமன்றம் கொடுத்த ஷாக்..!