செங்கோட்டையன் கோட்டையை அசைக்க களமிறங்கும் இபிஎஸ்!! குறி வைக்கப்படும் ஈரோடு, கோபி தொகுதிகள்!
செங்கோட்டையனின் 'கோட்டை'யை கைப்பற்ற, கோபியில் பொதுக்கூட்டம் அறிவித்து, அதை பிரமாண்டமாக நடத்திக் காட்டும் முனைப்பில் களம் இறங்கி இருக்கிறார், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி.
அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி, தன்னை விமர்சித்து கட்சியை விட்டு நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் சொந்த தொகுதியான கோபிச்செட்டிபாளையத்தில் வரும் 30-ம் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளார். இந்தக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி, செங்கோட்டையன் செல்வாக்கை மீறி தனது ஆதிக்கத்தை நிரூபிக்க வேண்டும் என்ற முனைப்பில் பழனிசாமி களம் இறங்கியுள்ளார்.
கடந்த 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க. கூட்டணியிலிருந்து அ.தி.மு.க. விலகியதே பெரும் பின்னடைவுக்கு காரணம் என்று கட்சிக்குள்ளேயே பலத்த விமர்சனம் எழுந்தது. ஈரோடு மாவட்டத்தில் கட்சியின் முக்கிய தலைவராக விளங்கிய செங்கோட்டையன், பழனிசாமியின் இந்த முடிவால்தான் கட்சி ஓட்டுகள் 20 சதவீதமாக சுருங்கியதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார். தென் மாவட்டங்களில் படுதோல்வி ஏற்பட்டதற்கு, ஓ.பி.எஸ்., சசிகலா, தினகரன் ஆகியோரை அரவணைக்காததே காரணம் என்றும் அவர் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.
சீனியர் நிர்வாகிகள் ஆறு பேருடன் சென்று பழனிசாமியை சந்தித்து இதை வலியுறுத்தியும் பலனில்லை. இதனால் கோபமடைந்த செங்கோட்டையன் பகிரங்கமாகவே தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். உடனே அவரது மாவட்டச் செயலர் பொறுப்பை பறித்தார் பழனிசாமி. பின்னர் பசும்பொன்னில் நடந்த தேவர் ஜெயந்தியில் சசிகலா, டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ். ஆகியோரை சந்தித்து பேசியதும் பழனிசாமிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதையும் படிங்க: இபிஎஸ் மேல பொறாமை படலாமா? ரொம்ப தப்பு! கடமை தவறிட்டாரு செங்கோட்டையன்! காமராஜ் விளக்கம்!
இந்த நிலையில்தான் செங்கோட்டையனின் சொந்த தொகுதியான கோபியில் பொதுக்கூட்டம் நடத்த பழனிசாமி முடிவு செய்துள்ளார். கோபி, அந்தியூர், பவானிசாகர் உள்ளிட்ட ஈரோடு மாவட்டத்தின் மேற்கு பகுதியில் செங்கோட்டையனுக்கு இன்றைக்கும் தனி செல்வாக்கு உள்ளது. அவரை நீக்கிய பிறகு அந்தப் பகுதியில் ஒரு மாவட்ட நிர்வாகியைக்கூட நியமிக்க முடியவில்லை.
கோவை மாவட்ட மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த செல்வராஜை நியமித்தார் பழனிசாமி. ஆனால் அவர் நடத்திய கூட்டங்களுக்கு ஆட்கள் வரவில்லை. செங்கோட்டையன் செல்வாக்கு குறித்து தனியாக விசாரணை நடத்தியதில், “கோபி தொகுதியில் மட்டுமல்ல, ஈரோடு மாவட்டத்தின் 8 தொகுதிகளிலும் செங்கோட்டையனின் செல்வாக்கு தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்; தனித்து நின்றாலும் வெற்றி பெறுவார்” என்று தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தனது பலத்தை நிரூபிக்கவும், செங்கோட்டையனுக்கு சவால் விடுக்கவும் கோபியையே பொதுக்கூட்டத்துக்கு தேர்ந்தெடுத்துள்ளார் பழனிசாமி. இந்தக் கூட்டம் பிரமாண்டமாக நடக்க வேண்டும் என்பதில் அவர் தீவிரம் காட்டுகிறார்.
கூட்டத்துக்கு ஆட்கள் குறைவாக வந்தால் தனது நிலை மேலும் பலவீனமாகிவிடும் என்பதால், ஈரோடு மட்டுமல்லாமல் கோவை, சேலம், நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்தும் ஆட்களை திரட்ட உத்தரவிட்டுள்ளார். கோபியில் நடக்கும் இந்த பொதுக்கூட்டம், அ.தி.மு.க.வுக்குள் புதிய அதிகாரப் போட்டியாகவும் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இப்படி நட்டாற்றில் விட்டுட்டாங்களே?! பாஜகவை நம்பிய செங்கோட்டையன்! அடுத்தது மூவ் எப்படி இருக்கும்!?